காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கெடுபிடியை தளர்த்த மத்தியஅரசு திட்டம்

Must read

ஸ்ரீநகர்:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கடுமையான கெடுபிடிகள் நீடித்து வரும் நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஊரடங்கு மற்றும் கெடுபிடிகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5ந்தேதி  ரத்து செய்தது. இதைப்போல அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு 144 தடை உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு உள்ளிட்ட இடங்களில்,  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், காஷ்மீரில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பள்ளிகள்,  அரசு அலுவலகங்கள் வரும் திங்கள் கிழமை (ஆக.19) முதல் செயல்பட  தொடங்கும் என்றும், அங்கு மக்களின் பாதுகாப்பு குறித்து, உள்ளூர் நிர்வாகம் நிலமையை ஆய்வு செய்த பிறகு அதன் அடிப்படையில் வரும் திங்கள் கிழமை  பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில், அங்கு தொலைதொடர்பு வசதிகள், இணையதள வசதிகள் அளிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பள்ளத்தாக்கில் தொலைதொடர்பு வசதிகளை மீட்டெடுப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

“தொலைபேசி சேவைகள் மீட்டெடுக்கப்பட வேண்டியிருந்தாலும், அது ஒரு கட்டமாக செய்யப்படும்,” என்று அவர் மேலும் கூறினார். பாதுகாப்புப் படையினர் முந்தையதைப் போலவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மக்கள் நகரம் மற்றும் பிற நகரங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காஷ்மீரில் இன்னும் சில தினங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article