டில்லி:

கர்நாடகா விவகாரம் இன்று உச்சநீதிமன்றத்தின் 6வது அறையில் நீதிபதிகள் சிக்ரி, போப்தேல அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அனல் பறக்கும் காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தது.

எடியூரப்பா சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோக்தகி ஆஜராகி கடுமையான வாதங்களை முன்வைத்து உணர்வுபூர்வமாக வாதாடிக் கொண்டிருந்தார். இதனால் நீதிமன்ற அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிற்க கூட இடம் இல்லாமல் பலரும் திணறிக் கொண்டிருந்தனர்.

அப்போது நீதிபதி சிக்ரி குறுக்கிட்டு வாட்ஸ்அப் குரூப்களில் ஒரு ஜோக் உலா வந்து கொண்டிருப்பதை படித்தேன். அதில்,‘‘ரிசார்ட் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் 117 எம்எல்ஏ.க்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்புவிடுக்க வேண்டும் என்று கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

நீதிபதி சிக்ரி இதை கூறியதும் நீதிமன்ற அறை முழுவதும் ஒரே சிரிப்பலை எழுந்து அடங்க சற்று நேரம் பிடித்தது. கர்நாடகா காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்கள் பெங்களூரு ஈகிள்டன் ரிசார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.