சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாக போலீஸ் பந்தோபஸ்து தொடர்ந்து வருகிறது.

காணும் பொங்கலையொட்டி நேற்று மக்கள் கூட்டம் அதிகம் இருந்தால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டி ருந்தது. மேலும் கடலில் பொதுமக்கள் இறங்காதவாறு தடுப்பு கட்டைகள் வைத்து கட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றும் போலீசாரின் தொடர் கண்காணிப்பில் மெரினா கடற்கரை காணப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழக மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்ததை தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து முதலாண்டு நிறைவடைந்து உள்ள நிலையில்,  இந்த ஆண்டும் அதன் தொடர்ச்சியாக ஏதேனும் கூட்டம் நடைபெறலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

20க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்களில் போலீசார் மெரினா கடற்கரை மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடற்கரையின் உள்சாலைக்கு யாரையும் அனுமதிக்காமலும் தடுத்து வருகின்றனர்.