கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள முதனை கிராமத்தில் 1993 ம் ஆண்டு ராஜாக்கண்ணு என்பவர் மர்மமான முறையில் இறந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஜெய்பீம்.

தீபாவளியை ஒட்டி ஓ.டி.டி. தளங்களில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே ‘அண்ணாத்த’வை மிஞ்சிய வரவேற்பைப் பெற்றது.

படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளால் இந்த திரைப்படம் குறித்த சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

இந்தநிலையில், ராஜாக்கண்ணுவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு 13 ஆண்டுகள் நீதிமன்றம் ஏறி தனது கணவருக்காக வழக்காடி வென்ற அவரது மனைவி பார்வதியம்மாள் சென்னை முகலிவாக்கத்தில் நிரந்தர வருமானமின்றி வசித்துவருவது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா, பார்வதியம்மாளை இன்று சந்தித்து அவர் சார்பில் ரூ. 10 லட்சமும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ. 5 லட்சமும் வழங்கினார்.

ஏற்கனவே, பார்வதியம்மாளை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது செலவுக்காக ஒரு லட்ச ரூபாய் வழங்கியது மட்டுமல்லாமல், மாற்றுத் திறனாளியான பார்வதியம்மாளின் மருமகளின் வாழ்க்கை முன்னேறத்திற்கு தேவையான ரூ. 2 லட்சம் வழங்குவதாக உறுதியளித்தார். அதோடு, முதனை கிராமத்தில் உள்ள பார்வதியம்மாளின் சொந்த நிலத்தில் வீடு கட்டித் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.