டெல்லி :
1200 கி.மி சைக்கிளில் சென்ற சிறுமியை இந்திய சைக்கிள் பெடெரேஷன் (CFI) கௌரவித்ததாக இவன்கா டிரம்ப் ட்வீட்.
ஊரடங்கு நேரத்தில் நாடுமுழுக்க பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் வேதனை விவரிக்கமுடியாதது.

உண்ண உணவின்றி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி போன தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் வாகனங்களிலும், வாகனங்களுக்கு பணம் கொடுக்க முடியாத லட்சக்கணக்கானோர் நடந்தும், தங்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி சாலைகளில் நடந்தே செல்கிறவர்கள் ஆங்காங்கே வழியில் சில நல்ல உள்ளங்கள் கொடுக்கும் உணவு மற்றும் தண்ணீரை பருகி செல்கின்றனர், அதற்கும் வழியில்லாதவர்கள் சாலையில் செத்துக்கிடக்கும் விலங்குகளின் மாமிசங்களை தின்று உயிர்வாழவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஆட்டோ ஓட்டி பிழைத்துவந்த மோகன் பாஸ்வான் இந்த ஊரடங்கு நேரத்தில் எந்த வருமானமும் இல்லாததால் தான் ஓட்டி வந்த வாடகை ஆட்டோவை அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு தனது 15 வயதே நிரம்பிய மகள் ஜோதி குமரியுடன் பீகாரில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.
ஆட்டோ ஓட்டிய போது காலில் அடிபட்டதால் தான் எப்படி செல்லமுடியும் என்று யோசித்தவருக்கு அவரது மகள் இவரை தனது சைக்கிளில் பின்னால் அமரவைத்து குருகிராம் முதல் பீகார் வரை 1200 கி மி தூரத்தை 7 நாட்களில் சென்று சேர்ந்தார்.
சிறுமி ஜோதி குமாரியின் நெஞ்சுறுதியை கண்டு வியந்த மக்கள், தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தையும் அலைக்கழிக்கும் மத்திய மாநில அரசுகளை பலவாறு திட்டித்தீர்த்தனர்.

இவர்களின் புலம்பல் மூலம் சிறுமியின் சைக்கிள் பயணத்தை கேள்விப்பட்ட இந்திய சைக்கிள் பெடரேஷன் இந்த சிறுமியை டெல்லிக்கு அழைத்துள்ளது, அங்கு நடக்கும் சோதனையில் தேர்வுசெய்யப்பட்டால், இவருக்கு தேவையான முறையான சைக்கிள் பயிற்சி அளித்து இவரை சைக்கிள் வீராங்கனையாக்க போவதாக கூறுகிறது, அதுவும் ஊரடங்கு எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது வந்தால் போதும் என்று சொல்லி இருக்கிறது.
இந்திய சைக்கிள் பெடரேஷன் வழங்கியுள்ள இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவன்கா டிரம்ப் தனது ட்விட்டரில் சிறுமி ஜோதி குமரியின் சாதனை இந்திய மக்களின் இதயங்களையும் சைக்கிள் பெடரேஷன் அமைப்பையும் வெகுவாக கவர்ந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.


அவரின், இந்த ட்வீட்க்கு இந்தியாவில் ஏழை தொழிலாளர்கள் தாங்கள் உயிர்வாழ்வதற்காக படும் அவஸ்தை மக்களின் மனங்களை கொள்ளையடிக்க செய்யும் சாதனை முயற்சி அல்ல என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், இவன்காவின் இந்த ட்வீட் இந்திய தொழிலாளர்கள் படும் துயரை உலகறிய செய்ததற்கு பாராட்டியும் வருகின்றனர்.
சிறுமி ஜோதி குமரியின் சொந்த மாநிலமான பீகாரில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இது குறித்து முடிவெடுக்க வேண்டிய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா சொந்த காரணங்களுக்காக அமெரிக்கா சென்றவர் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கத்தால் அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.