சென்னை: உள்ளீட்டு வரி கடன் (ITC) போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 175 கோடி  மோசடி செய்த பெரம்பூரைச் சேர்ந்த பிரேமநாதன்,  சேப்பாக்கத்தைச் சேர்ந்த பிரேம் ராஜா ஆகியோரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒருவர் திமுக பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் ஜிஎஸ்டி முறைகேடு நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தன.  பல நிறுவனங்களுக்கு ஏற்ப போலியாக ஆவணங்களை உருவாக்கி அதன் மூலம் போலியான ITC எனப்படும் உள்ளீட்டு வரிக் கடன் ஆவணத்தை தயாரித்து இந்த கும்பல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக  ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, கடந்த இரு நாட்களுக்கு முன்பு  பெரம்பூரைச் சேர்ந்த பிரேம நாதனை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. மேலும், அவர் கூறிய தகவலின்படி,  சென்னை,  சேப்பாக்கத்தைச் சேர்ந்த பிரேம் ராஜா என்பவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனார். ஆனால், அவர் தலைமறைவாகி பெங்களூரு சென்று, அங்கிருந்து வெளிநாட்டிற்க்கு தப்பிச் செல்வதாக தகவல் தெரிய வந்ததை அடுத்து, ஜிஎஸ்டி அதிகாரிகள் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரேம் ராஜாவை கைது செய்தனர்.

இருவரிடமும் முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு சிம்கார்டுகள் மற்றும் மென்பொருட் கள், செல்போன்கள் ஆகியவை மூலமாக போலி ரசீதுகளுக்கான பரிவர்த்தனைகளை மேற்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இதன் மூலம், சுமார் 59 கம்பெனிகளுக்கு 973.64 கோடி ரூபாய்க்கான உள்ளீட்டு வரி கடன் 175.88 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், உள்ளீட்டு வரிக் கடன் வாங்க போலியான ஆவணங்களை தயாரிப்பதற்காக குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி அவர்களுடைய பான் மற்றும் ஆதார் ஆவணங்களை மோசடியாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள்  பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி மற்றும் விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவல்களில் முக்கிய நபர்களின் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல்வேறு ஆதாரங்களை மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக, இந்த மோசடி கும்பல் தரகர்களுடன் பேசிய வாட்ஸ் அப் சாட்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதிலும், இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், இன்டர்நெட் மோடம்கள், லேப்டாப்கள், சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த மோசடி கும்பல் பயன்படுத்திய 25 வங்கிக் கணக்குகளை முடக்கியும், மேலும் போலியான நிறுவனங்கள் உருவாக்கி அதன் மூலம் மோசடி கும்பல் பதிவு செய்த 20 ஜிஎஸ்டி பதிவுகளை ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்  ரத்து செய்துள்ளனர். அவர்கள் மீது அடுத்த கட்ட கைது நடவடிக்கை பாயும் எனவும் ஜிஎஸ்டி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரக கூடுதல் தலைமை இயக்குனர் மாயங்க் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  சென்னையைச் சேர்ந்த ஒருவர், சரக்குகள் அனுப்பாமல், போலியான நிறுவனங்கள், போலி ரசீதுகள் வழியாக, வரி மோசடி செய்து வருவதாக, தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீடு, தொடர்புடையோர் வீடு, கடைகள் உட்பட, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரம்பூர், கொளத்துார் என, எட்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், குறைந்த வருவாய் உடையோரிடம் கடன் வாங்கி தருவதாகக் கூறி, பான்கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை பெற்று, 59 போலி நிறுவனங்களை உருவாக்கி, அதன் வாயிலாக, 973.64 கோடி ரூபாய்க்கு போலிரசீது தயாரித்து, 175.88 கோடி ரூபாய்க்கு, உள்ளீட்டு வரி மோசடி செய்ததும் தெரிய வந்துஉள்ளது. மோசடிக்கு பயன்படுத்திய, ‘லேப்டாப்’கள், மொபைல் போன்கள், கம்யூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவர்கள் பயன்படுத்திய, 25 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், 20 ஜி.எஸ்.டி., பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. பில் மோசடியில் மூளையாக செயல்பட்ட, 34 வயது நபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்றபோது, பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த, 35 வயது நபரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இதேபோன்று திருச்சி ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் போலியாக உள்ளீட்டு வரிக் கடன் தயாரித்த விவகாரத்தில், சென்னையைச் சேர்ந்த சார்டட் அக்கவுண்டன்ட் ஒருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.