சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ளன. இதன்பொருட்டு அரசியல் களம் தகித்துக்கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக கடைசி கட்ட பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில், வாக்காளர்களுக்கு அன்பளிப்பு அளிக்கப்படுவதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை போன்றவை அதிரடி ரெய்டுகளை நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும், பொருட்களையும் கைப்பற்றி வருகின்றன.
ஏற்கனவே, திமுக,அதிமுக, மநீம, தமாகா உள்பட பல அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடை பெற்றிருந்த நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் நீலாங்கரை வீடு உள்பட அவரது கணவருக்கு சொந்தமான 5 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக அரசியல் களத்தில், பாஜகவையும், மோடி அரசையும் கடுமையாக ஸ்டாலின் விமர்சித்து வரும் நிலையில், இன்று திடீரென ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். இவர் ஸ்டாலினின் மனசாட்சி என்று வர்ணிக்கப்படுகிறது. திமுகவின் உச்சபட்ச தலைவராகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.