தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் நள்ளிரவில்  வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. முன்னதாக அங்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் அக்கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல ஊர்வசி சோப் கம்பெனி அதிபரான ஊர்வசி அமிர்தராஜ், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.  அவர் தூத்துக்குடி டுவிபுரத்தில், வாடகை வீடு பிடித்து கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  அந்த வீட்டில்,  வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,  நள்ளிரவு  அங்கு விரைந்த  வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை செய்ய முயன்றனர். ஆனார்ல, அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவர்களை பணி செய்ய விடாமல் தடுப்பு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில்  5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் சிக்கியதாகக் கூறப்படுகிறது.