சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நாளை மறுநாளுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளனர்.

இந் நிலையில் இன்று காலை முதல் திடீரென வருமான வரித்துறையினர் திமுகவின் முக்கிய பிரமுகர்களின் இல்லங்களில் சோதனை நடத்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இல்லத்தில் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 11 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது.

இந் நிலையில் திமுக தலைவர் மகள் வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவு பெற்றுள்ளது. சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: 11 மணி நேரம் துருவி துருவி சோதனை நடத்தியும் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். சோதனையின் போது ரூ.1.36 லட்சம் மட்டுமே இருந்தது. அதற்கான வங்கி பரிவர்த்தனையை காண்பித்ததும் திரும்பிக் கொடுத்தனர் என்று கூறினார்.