நாட்டின் செய்தி நிறுவனங்களுக்கு இது நெருக்கடியான காலம். எனவே, தாங்கள் ஒரு சுதந்திரமான பத்திரிகை நியதியை நோக்கி நடைபோடுவதா? அல்லது அரசின் அதிகாரத்திற்கு அடிபணிவதா? என்பதை அவைகள் முடிவுசெய்யும் நேரமிது என்றுள்ளார் இந்து குழுமத்தைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் என்.ராம்.
‘த வயர்’ இணையதளத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் அவர் இதை கூறியுள்ளார். ரஃபேல் ஊழல் தொடர்பான சிக்கலில் மாட்டியதால், தங்கள் பத்திரிகைக்கு பெரிள அளவிலான விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டது எனவும், அதேசமயம், அதற்காக அடிபணியப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்கள், 7.8 பில்லியன் யூரோக்களுக்கு அதிக விலை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்த விசாரணை அறிக்கைகள், இந்து பத்திரிகையில் வெளியாகி, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனால், இந்து பத்திரிகைக்கு கடும் நெருக்கடிகள், மத்திய அரசின் தரப்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்து என்.ராம் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, “தேசிய மற்றும் சர்வதேச அளவில், செய்தித் தாள்களுக்கு இது நெருக்கடியான நேரம். எனவே, தாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டுமென்பதை செய்தி நிறுவனங்கள் தீர்மானிக்கும் நேரமிது. அரசு விளம்பரங்கள் என்ற ஆயுதங்களின் மூலம் செய்தி நிறுவனங்கள் மிரட்டப்படுகின்றன அல்லது வளைக்கப்படுகின்றன.
நியூஸ் 18 தமிழ் ஊடகத்திலிருந்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ராஜினாமா செய்யுமாறு கோரப்பட்டதும், மூத்த ஆசிரியர் எம்.குணசேகரனின் எடிட்டோரியல் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதும், இந்த விஷயத்தில் டெல்லியின் ஆதிக்கத்திற்கு சான்றாக உள்ளன.
மேலும், நமது நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்கள், தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதும் கவலையளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் பெரிதும் கவலையளிக்கின்றன. ஒருசில தீர்ப்புகள் மட்டுமே சிறப்பானதாக இருக்கின்றன.
மேலும், தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளும் நிலைமையை மோசமாக்குகின்றன. எதிர்வரும் பீகார் தேர்தல் மற்றும் அடுத்து நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், 65 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் அனைவருக்கும் அஞ்சல் வாக்கு முறையை விரிவாக்குவதன் மூலம், ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறையின் மூலம் வாக்காளர்களை தனிப்பட்ட முறையில் செல்வாக்கு செலுத்த முடியும்.
ராஜஸ்தானில், மாநில ஆளுநர் மத்திய அரசின் முகவராக வெளிப்படையாக செயல்படுகிறார். ஆனால், இன்றைய இக்கட்டான நிலை, முந்தைய நெருக்கடி நிலையைப் போல கடந்து செல்லும் என்று நம்புகிறேன்” என்றார் அவர்.