டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், இன்று மாநில பட்ஜெட் தாக்கலாக இருந்த நிலையில், அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். 75ஆண்டுகளில், இந்திய வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது என மாநில முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாநில அரசுக்கும் மத்தியஅரசுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாநில ஆளுநர்கள், மத்தியஅரசின் பிரதிநிதிகளாக உள்ளதால், மாநில அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் இந்த போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையில், டெல்லி ஆம்ஆத்மி அரசின் புதிய மதுபான் கொள்ளை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இரு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால், அங்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது அங்கு டெல்லி மாநில அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, இன்று  2023-24ஆவது நிதியாண்டுக்காக பட்ஜெட் இன்று டெல்லி  சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  திடீரென மத்திய அரசின் உத்தரவு காரணமாக பட்ஜெட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பியதாகவும் அதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை என்றும் அம்மாநில நிதிமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் “சில மர்மமான காரணங்களால் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இந்திய வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தி உள்ளதாக விமர்சித்துள்ளார்.”

டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்  முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு அவரிடம் இருந்த நிதித்துறை கெஹ்லோட்டிடம் சென்றது. இன்று காலை 10 மணிக்கு கூடும் பேரவையில் கெஹ்லோட் பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த மார்ச் 10ஆம் தேதியே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக பட்ஜெட் அனுப்பபப்ட்டுள்ளதாக கெஹ்லோட் அறிவித்துள்ளார். இருப்பினும் சில காரணங்களுக்காக மத்திய அரசு அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், டெல்லி பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் 75 ஆண்டு கால வரலாற்றில், மாநில பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை. டெல்லி மக்களிடம் நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பாக, மாநில ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளதாகவும், அதற்கு பதில் அளிக்காத நிலையில், பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. பட்ஜெட்டில்,  “பயோ-டிகம்போசர் திட்டத்திற்கான செலவு ரூ. 41.62 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஆத்மி அரசு  விளம்பரத் திற்காகச் செய்யப்பட்ட செலவு ரூ. 16.94 கோடி என குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், இது திட்டச் செலவை விட 40 மடங்கு அதிகம்…” போன்ற முரண்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு கேள்வி எழுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.