சென்னை: மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று தெரிவித்துள்ள மேயர் பிரியா, இன்று காலை மெரினாவில் தீவிர தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்து, தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம், இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் மெரினா கடற்கரையில் இன்று “நம்ம சென்னை – நம்ம பொறுப்பு”, “நம்ம மெரினா, நம்ம பெருமை” என்ற உணர்வுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாபெரும் மெரினா கடற்கரை தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தூய்மை பணியினை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், சென்னை மாநகரை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கவும் பொதுமக்கள் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வினை ஏற்படுத்தி, பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளை அகற்றினார்கள். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் நண்பர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
இதனை தனி ஒருவரின் செயலாக தொடங்கி, சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த முயற்சியாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். தூய்மையான, பசுமையான சென்னையை உருவாக்க, இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே. ஜெ. பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா, சென்னையில் வாழும் மக்கள் சனி, ஞாயிறுகளில் தங்கள் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்கக்கூடிய நல்ல இடமாக மெரினா கடற்கரையை இயற்கை நமக்கு அமைத்து கொடுத்து இருக்கிறது. மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
சென்னை மாநகராட்சி சார்பாக இங்கு தொடர்ந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் இங்கு வரும்போது குப்பைகள், பிளாஸ்டிக் என தனித்தனி யாக போடுவதற்கு குப்பை கூடைகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மற்ற குப்பைகளை போட என்று தனியாக குப்பை கூடைகள் வைக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்களும் மாநகராட்சியுடன் இணைந்து கடற்கரையை தூய்மையாக வைக்க வேண்டும் என வலியுறுத்தியவர், மெரினா கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் (Blue Flag) பெற தமிழக அரசால் முன்னெடுப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றவர், ப்ளூ ஃபிளாக் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதற்கு ஏற்றாற்போல தமிழக அரசால் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
Blue Flag என்பது என்ன?
நீலக்கொடி சான்றிதழ் என்பது (Blue Flag ) கடற்கரைகள், மெரினாக்கள் மற்றும் நிலையான படகு சவாரி சுற்றுலா இயக்குபவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சான்றிதழ்
நீலக் கொடி சான்றிதழ் என்பது உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ சுற்றுச்சூழல் லேபிள்களில் ஒன்றாகும். இது சுத்தமாக கடற்கரைகள், மெரினாக்கள் மற்றும் நிலையான படகு சவாரி சுற்றுலா ஆபரேட்டர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த சான்றிதழை டென்மார்க்கை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை அல்லது FEE வழங்குகிறது. இது FEE உறுப்பு நாடுகளில் உள்ள கடற்கரைகள் மற்றும் மெரினாக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்த சான்றிதழை பெறும் நோக்கில், தற்போது தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்து கடற்கரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
[youtube-feed feed=1]