உலகமே உற்றுப்பார்க்கும் சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இந்த விண்கல சோதனை வெற்றி பெற வேண்டும் என திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் வேண்டுதல் மேற்கொண்டார்.

சில விஞ்ஞானிகள் மற்றும் தனது உடன் பணிபுரியும் நபர்களுடன் திருப்பதிக்கு வருகை தந்த இஸ்ரோ தலைவர் சிவன், பெருமாளை தரிசித்து, சந்திராயன் 2 விண்கல சோதனை வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுதல் மேற்கொண்டதாக திருப்பதி கோவிலை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வேத பண்டிதர்கள் சார்பில் வேத ஆசிர்வஸனம் சேவையும் அவரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுவிட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்ட சிவன், சூலூர்பேட்டையில் உள்ள செங்காளம்மன் கோவிலிலும் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டார்.

முன்னதாக திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், “சந்திராயன் -2 விண்கலம் திட்டமிட்டப்படி திங்கள்கிழமை காலை 2.51க்கு விண்ணில் ஏவப்படும். இது இந்தியாவின் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பணியாகும். ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இந்தப் பணிக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும், இரண்டு மாத பயணங்களுக்கு பின் சந்திராயன் 2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும்.

இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தில் சந்திராயன் 2 தனது தடத்தை பதிக்கவுள்ளது. இதுவரை எந்த நாடும் இதற்கான முயற்சியில் இறங்கவில்லை. இந்த முயற்சியானது நிலவு குறித்த அறிவியலில் நிறைய புதிய வெளிப்பாடுகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது” என்று தெரிவித்தார்.