பெகாசஸ் ஸ்பைவேர் எனும் மென்பொருளைத் தயாரித்த இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளது.

உலகெங்கும் உள்ள பல்வேறு அடக்குமுறை அரசாங்கங்களுக்கு இந்த மென்பொருளை விற்றதன் மூலம், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் என்று பல்வேறு தரப்பினரைக் காழ்ப்புணர்ச்சியுடன் கண்காணிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

சர்வதேச பத்ரிக்கைகளின் கூட்டமைப்பு கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியிட்ட பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உலகின் பல்வேறு நாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்அவிவில் உள்ள என்.எஸ்.ஓ. நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டுவருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த என்.எஸ்.ஓ. நிறுவன அதிகாரிகள், பாதுகாப்புத் துறையின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம், இந்த சோதனை மூலம் நாங்கள் தவறிழைக்கவில்லை என்பதை நிரூபிப்போம் என்று கூறியுள்ளனர்.

இஸ்ரேல் அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், இது பூர்வாங்க சோதனை தான் என்றும் முழுஅளவிலான ஆய்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.