டில்லி

வீடுகளின் கூரைகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு 40% வரை மானியம் அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் மாற்றுச் சக்தி முறையில் மின்சாரம் தயாரிக்க அரசு அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது.  அவ்வகையில் காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  குறிப்பாகச் சூரிய மின்சக்தி உற்பத்தி மிகவும் எளிதானதாகும்.  இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர் கே சிங் சில அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்

அமைச்சர், “நாட்டின் பல்வேறு இடங்களில் கூரைகள் மீது சூரிய சக்தியை நிறுவும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக, கூரைகள் மீது நிறுவப்படும் சூரிய சக்தித் திட்டத்தை (பகுதி II) மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அமல்படுத்துகிறது.  இதையொட்டி 2022-ஆம் ஆண்டிற்குள் 4000 மெகாவாட் திறன் கொண்ட கூரைகள் மீதான சூரிய சக்தியை குடியிருப்பு துறையில் மானியத்துடன் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் தனி வீடுகளின் கூரைகளில் 3 கிலோ வாட் வரை சூரிய சக்தியை நிறுவுவதற்கு 40% வரை மானியம் வழங்கப்படும். இதைப் போல் 3 முதல் 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கருவிகளை நிறுவுவதற்கு 20% மானியம் அளிக்கப்படும்.

அடுக்கு மாடி குடியிருப்பு நல்வாழ்வு சங்கங்கள்/ குழு வீடுகளின் சங்கங்களுக்கு பொதுவான மின்சார வசதிகளுக்குப் பயன்படுத்துவதற்காக நிறுவப்படும் 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி உபகரணங்களுக்கு 20% மானியம் வழங்கப்படும்.  மின் தொகுப்பில் இணைக்கப்பட்ட கூரைகள் மீதான சூரிய சக்தி அமைப்புமுறைகளின் ஒட்டுமொத்த ஊக்குவிப்பிற்காக இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.