சென்னை அம்பத்தூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் அம்பத்தூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளிகுப்பதில் ஓம் சக்தி நகரில் இசக்கியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் அம்மன் இசக்கியம்மன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது. உக்ர தெய்வமான இசக்கியம்மன் இங்கு சாந்த கோலத்தில் அமைதியாக காட்சியளிக்கிறாள். இடக்கையில் குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் இருப்பது அவளின் கருணை, வீரத்தை வெளிப்படுத்துகிறது. குழந்தையை கையால் அரவணைத்து காப்பதுபோல, தன்னை நாடிவரும் அன்பர்களை அரவணைத்து அருள்புரிகிறாள். நீதிதெய்வமாக இருந்து தர்மத்தை நிலை நாட்டுவதன் அடையாளமாக தலையில் நெருப்புக்கிரீடம் தாங்கியிருக்கிறாள். கன்னியாகுமரி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் மாதிரியிலும், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் உருவ அமைப்பிலும் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வரம் தருபவளாகவும், குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காப்பவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள். இங்கு தமிழ் மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளியன்று மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். திருவள்ளுவர் மற்றும் ஒளவையாருக்கு இங்கு தனி சந்நிதிகள் இருப்பது சிறப்பாகும்.

திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை.