1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி அந்த சம்பவம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த வில்லியம் எஸ்கார்ட் ஆஷ் குடும்பத்துடன் பயணிக்க மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வருகிறார். அவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொள்கிறார்.
“ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார். அவர் தேசத் தியாகி” என்பது பலரது நம்பிக்கை.
வாஞ்சிநாதனை போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் வாஞ்சிநாதனின் நினைவு தினத்தை பல்வேறு அமைப்பினரும் அனுசரித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயர் சூட்டப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க, “பார்ப்பனரான வாஞ்சிநாதன், சனாதனவாதி. அதாவது தீவிரமாக சாதி பேதம் பார்க்கும் நபர்களில் ஒருவர். ஆஷ்துரை, சாதிபேதத்தை எதிர்த்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் அளித்தார். ஆகவேதான் ஆஷ்துரையை கொல்ல சனாதனவாதிகள் திட்டமிட்டார்கள். அவர்களின் அம்பாகத்தான் வாஞ்சிநாதன் செயல்பட்டார்” என்றும் ஒரு கூற்று உண்டு.
இந்த வாதப்பிரதிவாதங்கள் இன்றுவரை தொடர்கிறது. “’தீண்டாமை நிலவிய கொடூரமான காலக்கட்டத்தில் சமத்துவத்துக்காக பாடுபட்டவர் ஆஷ்துரை. அதனாலேயே சனாதன தர்மத்தை வலியுறுத்தியவர்களால் கொல்லப்பட்டார்” என்று கூறி, கடந்த 2015ம் ஆண்டு, “ஆதித்தமிழர் பேரவை”யைச் சேர்ந்தவர்கள் ஆஷ்துரையின் சமாதியில் அஞ்சலி செலுத்தியதும் நடந்தது.
(பாளையங்கோட்டையில் உள்ள இங்கிலீஷ் சர்ச் வளாகத்தில் ஆஷ்துரை கல்லறைக்கு இருக்கிறது.)
இது குறித்து கூறும் வரலாற்று ஆய்வாளர்கள், “குற்றாலத்தில் கடவுள் சிலையும், பார்ப்பனர்களுமே குளிக்க சட்டம் இருந்தது. அதை உடைத்தெறிந்து அனைத்து பிரிவினரையும் அருவியில் குளிக்க வைத்தவர். இது உயர் சாதியினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது” என்கிறார்கள்.
இது ஆதாரபூர்வமான விசயம். தவிர செவிவழிச் செய்தி ஒன்றும் சொல்லப்படுகிறது. பிரசவ வேதனையில் தவித்த ஒரு தலித் பெண்ணை கண்ட ஆஷ்துரை, அந்த பெண்ணை மருத்துவமனையல் அனுமதிக்க, அக்ரஹார தெரு வழியே தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார். இது உயர் சாதியினரிடையே ஆஷ்துரை மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது என்பதுதான் அந்த செய்தி.
வாஞ்சிநாதன், சனாதனத்தைக் காக்க அதாவது சாதி பிரிவினையைக் காக்கவே ஆஷ்துரையை கொலை செய்தார் என்று கூறுபவர்கள், இன்னொரு தகவலை குறிப்பிடுகிறார்கள்.
அது, இறந்து கிடந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் இருந்த கடிதம். அதில், “ஆங்கிலச் சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத `சனாதன தருமத்தை காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வோர் இந்தியனும் தற்காலத்தில் தேச சத்ருவாகிய ஆங்கிலேயரை துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சித்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு
ஆஷ் நினைவிடத்தில் அஞ்சலிமிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராஸிகள் பிரத்தியக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை –
-இப்படிக்கு ஆர். வாஞ்சி அய்யர்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆக ஒரு புறம் வாஞ்சிநாதனுக்கு நினைவஞ்சலி, இன்னொருபுறம் அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷ்துரைக்கு நினைவஞ்சலி என சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
வாஞ்சிநாதன் குறிவைத்தது…. தேசமா, சாதியா என்பதை முழுமையாக ஆராய்ந்து வரலாற்று ஆய்வாளர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.