லட்சுமி – வாஞ்சிநாதன் – ஜெயகிருஷ்ணன் ( படம் நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்)

வெள்ளையர் ஆட்சி காலத்தில் திருநெல்வேலியின் ஆட்சியராக இருந்தவர் ராபர்ட் வில்லியம் ஆஷ். இவரை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் என்று கூறி ஒருவரது பேட்டி தமிழ் இந்து நாளிதழில் நேற்று   வெளியாகியிருக்கிறது.

அதில் ஜெயகிருஷ்ணன் என்பவர் வாஞ்சிநாதனின் மகள் லட்சுமியின் மகன் என்று தன்னை சொல்லிக்கொள்கிறார்.

மேலும் அவர், “ ஆஷ்துரையை வாஞ்சிநாதன் கொலைசெய்த பிறகு, கர்ப்பமாயிருந்த அவரது மனைவியை பிரிட்டிஷாரிடமிருந்து காப்பாற்ற பசும்பொன். முத்து ராமலிங்கம்தான் மூன்று மாதங்கள் கூட்டு வண்டியில் வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தார்.

குழந்தை பிறந்த பிறகு, கந்தர்வக்கோட்டையில் டீக்கடைக்காரர் ஒருவரிடம் 25 ஆயிரம் பணம் கொடுத்து, அந்தக் குழந்தையை ஒப்படைத்தார். பிறகு, சென்னையில் ஒரு வீட்டில் குழந்தையின் தாயையும் மறைவாக வைத்திருந்தார்” என்கிறார்.

ஆனால், “பசும்பொன்.முத்துராமலிங்கம் பிறந்தது அக்டோபர் 30, 1908. வாஞ்சிநாதன் கொலைசெய்தது ஜூன் 17, 1911. ஆக.  இரண்டே முக்கால் வயது குழந்தையாக இருந்த முத்துராமலிங்கம்,  கர்ப்பிணிப் பெண்ணை வண்டியில் வைத்துப் பாதுகாத்திருக்கிறாரா?”  என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தி இந்து நாளிதழ் கட்டுரை

இந்த நிலையில், மூத்த செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வதநாதன், தனது முகநூல் பக்கத்தில், “ தி இந்து தமிழ் நாளேட்டில் வெளியான இந்தக் கட்டுரை குறித்து வாஞ்சிநாதனின் தம்பியின் பேரன் கோபாலகிருஷ்ணனிடம் பேசினேன். இந்தக் கட்டுரை குறித்துப் பேசுவதற்காக, தான் இப்போது இந்து அலுவலகத்திற்குத்தான் போய்க்கொண்டிருப்பதாகக் கூறினார்.

வாஞ்சிநாதனுக்கு பிறந்த பெண் குழந்தை அவர் இருக்கும்போதே இறந்துவிட்டது என்று தெரிவித்த கோபாலகிருஷ்ணன், வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் சென்னையிலிருந்து மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர்அவரைச் சென்று பார்த்ததாகச் சொல்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

முரளிதரன் பதிவு

ஆகவே, தி இந்து நாளிதழ் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல லட்சுமி என்பவர் வாஞ்சிநாதனின் பேத்தியா, ஜெயகிருஷ்ணன் என்பவர் வாஞ்சிநாதனின் கொள்ளுப்பேரனா என்ற சந்தேகம் எழுகிறது.

“வாஞ்சிநாதன் செய்த கொலை குறித்து இருவேறு கருத்துக்கள் உண்டு. ஆனாலும், அவரை தேசத்தியாகியாவே மத்திய மாநில அரசுகள் மதிக்கின்றன. இப்படிப்பட்ட ஒருவரின் வாரிசு என்பவர்கள் உண்மையான வாரிசுகள்தானா என்பது குறித்து ஆராய்வது அவசியம். ஆகவே தன்னை வாஞ்சிநாதன் வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் ஜெயகிருஷ்ணன் என்பவரிடம் தக்க விசாரணை நடத்தி உண்மையை உலகுக்கு அறிவிக்க வேண்டியது அரசின் பொறுப்பு” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.