கோவையில் கைதான ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுடன் சமூக வலைதளத்தில் தொடர்பில் இருந்த கோவையை சேர்ந்த 7 பேர் வீடுகளில் கடந்த 12ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 7 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோவை மாநகர போலீசார் ஐ.எஸ். பயங்கரவாத கருத்துகளை பரப்பியதாக முகமது உசேன், ஷாஜகான், சபியுல்லா ஆகிய 3 பேரை உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவையில் அடுத்தடுத்து ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் அவர்கள் மூலம் தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இரு மாநில போலீசாரும் பாதுகாப்பை பலப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா மற்றும் 7 பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பயங்கரவாதி ஒருவருடன் இவர்கள் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. கடந்த 2015ம் ஆண்டு கத்தாரில் இருந்து பாலக்காட்டுக்கு வந்த அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிரியாவுக்கு தப்பி செல்வதற்காக வந்தது தெரியவந்தது. மேலும் இவர் கோவையில் உள்ள ஏராளமானவர்களுடன் முகநூலில் நண்பராக இருந்துவந்தது தெரியவந்தது.

கேரளா மற்றும் கோவையை சேர்ந்த 30 பேர் தனியாக வாட்ஸ் ஆப் குருப் தொடங்கி அதில் பயங்கரவாத சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்துள்ளதும் தெரியவந்தது. கடந்த 2014ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பயங்கரவாதி கோவைக்கு வந்து இங்குள்ளவர்களை சந்தித்து பணம் மற்றும் பயங்கரவாதம் சம்பந்தமான கையேடு ஆகியவற்றை கொடுத்து சென்றதும் தெரியவந்தது.

மேலும் கோவையை சேர்ந்தவர்களுக்கு கேரளாவை சொந்த ஊராக கொண்டு கத்தாரில் வேலை செய்து வரும் சகாமுகமது, சுல்தான், ரியாஸ் அபுபக்கர் ஆகியோருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இவர்கள் அல்-கொய்தா அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

எனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை, கேரளாவை சேர்ந்த மேலும் சிலரை கண்காணித்து வருகிறார்கள். விரைவில் அவர்களது வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.