சென்னை: சிறைக்கைதியாக இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின்  வழக்கில் நாளை  சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஜாமினுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு எழுந்து நிலையில், ஜாமின் வழங்கப்படுமா என்பது நாளை தெரிய வரும்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை  சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றமும் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. எனினும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்றும், அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3-வது முறையாக ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  மேலும்,  அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி பதில் மனுத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில்,  வழக்கு விசாரணையின் துவக்க நிலையில் இருந்தே, மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஒத்துழைத்ததாக கூறுவது தவறு. மனுதாரர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அல்ல. கைது குறித்து, அவரின் குடும்ப உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. இவற்றை, நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. கைது செய்யப்பட்டு சிறையில் 182 நாட்களாக இருப்பதாக கூறுவது தவறு.

இலாகா இல்லாத அமைச்சராக, ஜூன் 14 முதல் ஜூலை 17 வரை மருத்துவமனையில் இருந்துள்ளார். ஜூலை, 17 முதல் அக்டோபர் 9 வரை, சிறை மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை மருத்துவமனையில் இருந்துள்ளார். மனுதாரர், தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். அமைச்சர் என்ற முறையில் அனைத்து சலுகைகளும் அனுபவித்து வரும் அவர், சக்தி மற்றும் செல்வாக்கு மிக்க நபர் என்பதால், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தி விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வழக்கின் அனைத்து முக்கிய உண்மைகளையும் மறைத்து மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் நோக்கில், மீண்டும் மீண்டும் அதே காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் கேட்டுள்ளார். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ். அல்லி  தீர்ப்பை ஒத்தி வைத்தார். அதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமின் மனுமீது நாளை  தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.