நெல்லை: திருநெல்வேலி மாமன்ற திமுக மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டு உள்ளது. இந்த வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில்,  நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்துகொள்ளக்கூடாது என திமுக கவுன்சிலர்களுக்கு திமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சரவணன் இருக்கிறார். நெல்லை மாநகராட்சியிலுள்ள 55 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 51 இடங்களில் வெற்றிபெற்று, அசுர பலத்துடன் இருக்கிறது. மேயராக தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த பி.எம்.சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார். மேயர் சரவணன் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதில்லை என்பதும் கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு. அவருக்கும், பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்புக்கும் இடையே  கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், மாநகராட்சிக் கூட்டங்களில் நேரடியாகவே மேயருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்கிறார்கள். பெண் கவுன்சிலர் ஒருவர், மேயருக்கு எதிராக மாநகராட்சிக் கூட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்தார். மற்றொரு பெண் கவுன்சிலர் மாநகராட்சியில் நடக்கும் ஊழல்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆணையரிடம் புகார் மனு அளித்தார். இந்த மோதல் திமுக கவுன்சிலர்களையே இரு பிரிவாக பிரிந்து உள்ளது. பல திமுக கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மேயர் சரவணனுக்கு எதிரான நடவடிக்கைககளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

மொத்தமுள்ள கவுன்சிலர்களில்  45 கவுன்சிலர்கள்  மேயரை மாற்றக் கோரி தி.மு.க தலைமைக்கு புகார் மனு அனுப்பினர். இதுவரையிலும் மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மூன்று முறை சென்னைக்குச் சென்று கட்சித் தலைமையிடம் புகார் செய்திருக்கின்றனர். ஆனால், திமுக தலைமை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விவகாரத்தில் திருநெல்வேலி மாநகராட்சியில் பணிகள் ஏதும் நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது. ஏற்கனவே தொடங்கப்பட்ட  பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் முறையாக நடைபெறவில்லை என்றும், திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவுல், அந்த முறைகேடுகள் மூலம் கிடைக்கும் பணத்தை மேயர், கவுன்சிலர்களுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட மோதல்தான், மேயர் சரவணனுக்கு எதிரான குற்றச்சாட்டு என விமர்சிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து திமுக தலைமை,  அப்துல் வஹாப்பின் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்தது. பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார். அவர் மேயரிடம் பிரச்னை செய்யும் கவுன்சிலர்களை பலமுறை எச்சரித்தும், பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.

இந்த நிலையில், மேயரை எப்படியும் மாற்றியே தீர வேண்டும் என அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக போர் கொடி தூக்கி வருகின்றனர்.  மேயர் சரவணனை மாற்றிவிட்டு, தங்களுக்கு சாதகமான ஒருவரை மேயராக்க வேண்டும் என கவுன்சிலர்கள் முயற்சி செய்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், திருநெல்வேலியில் மேயரை மாற்றினால், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவது மட்டுமல்லாமல், இதை முன்னுதாரணமாக வைத்து, அடுத்தடுத்து பல்வேறு மாநகராட்சிகளில் இது போன்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், திமுக தலைமை இதுவரை மேயருக்கு ஆதரவாகவே காய் நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில், 38 கவுன்சிலர்கள்  திமுக மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின்மீது ஜனவரி 12ஆம் தேதி (நாளை)  வாக்கெடுப்பு விவாதம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவித்துள்ளளார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இதில்,  நாளை நடைபெற உள்ள நெல்லை, மாநகராட்சி வாக்கெடுப்பு கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது, மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக கவுன்சிலர்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக  கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிக்கும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்து விடும். அதேநேரம், கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மேயருக்கு எதிராக வாக்களித்தால் மேயர் பதவி பறிக்கப்பட்டு, ஆளுங்கட்சிக்கு மிகப்பெரும் அவப்பெயர் ஏற்படும் என்பதால், எதிர்ப்பு கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுக தலைமை இறங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

என்ன நடக்கப்போகிறது என்பது நாளை தெரிய வரும்.