சென்னை:

டிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து, விலங்குகள் நல வாரியம் அவசர ஆலோசனையை துவங்கியிருக்கிறது.

நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்த படத்தை ரூ.140 கோடி செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க..  அட்லி இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் விஜய், மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் தலைப்பு குறித்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிறகு கடந்த 6-ஆம் தேதி அந்தத் தலைப்பை பயன்படுத்தத் தடை இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேளிக்கை வரி பிரச்சினையும் தீர்க்கப்பட்டு தீபாவளிக்கு மெர்சல் படம் திரைக்கு வரும் என்று பட அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆனால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று அளிக்காததால் படத்தை திரையிட முடியாத சூழல் நிலவுகிறது.

படத்தில் பயன்படுத்தப்பட்ட புறா தொடர்பான காட்சிகள் உள்ளன. இக்காட்சிகள் கிராபிக்ஸ்தான் என படக்குழு கூறினாலும் அதற்கான ஆதாரங்களை படக்குழுவினரால் அளிக்கமுடியவில்லை. மேலும் படத்தில் இடம்பெறும் பாம்பு ராஜநாகம் என்பதற்குப் பதிலாக நாகப்பாம்பு என குறிப்பிடப்பட்டது. இதனால் அந்த வாரியம் தடையில்லா சான்று அளிக்கவில்லை.

இந்த நிலையில் மெர்சல் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த இரு  தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இதையடுத்து நேற்று நடிகர் விஜய்யும், இயக்குநர் அட்லியும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

இதையடுத்து  இன்று காலை 10 மணிக்கு மெர்சல் படத்துக்கு தடையில்லா சான்று வழங்குவது தொடர்பாக சென்னை திருவான்மியூரில் உள்ள விலங்குகள் நல வாரியத்தில் அவசர ஆலோசனை துவங்கியிருக்கிறது.

அக்குழு என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்தே தீபாவளிக்கு மெர்சல் ரிலீஸ் ஆகுமா என்பது தெரியவரும்.