சென்னை:

மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும்  3வது வேட்பாளராக, தமிழக சட்டமன்ற செயலாளரிடம் இன்று  மனுத்தாக்கல் செய்தார்.

இதன் காரணமாக வைகோ எம்.பி.யாவது கேள்விக்குறியாகி உள்ளது. அவரது சிறை தண்டனை சட்டச்சிக்கலை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ராஜ்சபா எம்.பி. பதவிக்கு 6 இடங்கள் காலியாகும் இல்லை, அதிமுக, திமுக தலா 3 இடங்களை பெற வாய்ப்பு உள்ளது. திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம் ஆகியோர் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஒரு இடம் கூட்டணி கட்சித்தலைவரான வைகோவுக்கு கொடுக்கப்பட்டு, அவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில்,  திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ 3வது வேட்பாளராக இன்று  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 5ந்தேதி வைகோமீதான தேசத்துரோக வழக்கில், அவருக்கு  ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே  திமுகவை சேர்ந்த  என்.ஆர்.இளங்கோவை, 3 வது வேட்பாளராக திமுக அறிவித்து, அவர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.