சென்னை:  கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? என புதிய தலைமுறையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை என கொலை குறித்த புள்ளிவிபரங்களை தவறாக சித்தரித்து, அதை மிகைப்படுத்தி சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், தகவல்பெறும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவல்களைக் கொண்டே செய்திகள் வெளியிடப்பட்டு இருப்பதாக ஊடகம் தெரிவித்துள்ளது. 

நெல்லை  உள்பட தென்மாவட்டங்களில் அடிக்கடி நடைபெறும் கொலைகள், சாதிய பிரச்சினைகள், தகராறுகள் போன்றவை கட்டுக்குள் இல்லாமல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் நெல்லை டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரை பட்டப்பகலில் வெட்டி கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சியில்,  கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? என கேள்வி எழுப்பி நெல்லையில் நடைபெற்றுள்ள கொலை விவரங்களை பட்டியலிட்டு விமர்சனம் செய்தது. மேலும், நெல்லை  மாவட்டத்தில் நடைபெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்கள் கோரப்பட்டு, அதைக்கொண்டே செய்திகளை வெளியிட்டது.

அதாவது, திருநெல்வேலி புறநகரில் கடந்த 2020 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் 285 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், 2025 மார்ச் (15ந்தேதி வரை) 296 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும்  தெரிவித்து உள்ளது.  இந்த தகவல் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமே கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1045 பேர் என்றும்,  குண்டர் சட்டத்தில் மட்டும் 392 பேர்  கைது  செய்யப்பட்டு இருப்பதாகவும்,   சிறார்கள் 60 பேர் உட்பட கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது. மேலும், நெல்லை மாநகர பகுதியான ப பெருமாள்புரம் பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் சாதி ரீதியான கொலைகள் அதிகம் பதிவாகி யுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  செய்திக்கு  (‘கொலை நகரமாக மாறும் நெல்லை?) திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.  தகவல் பெறும்உரிமை சட்டத்தின் கீழ் பெறப்படும் கேள்விகளுக்கு மாநில அரசே பதில் தெரிவித்துள்ள நிலையில், அதை வெளியிட்ட ஊடுகம் திரித்து கூறியிருப்பதாகவும், தவறான தகவல் என்றும் காவல்துறை கூறியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் கொலை குற்றவாளிகளின் செயல்பாடுகள் கட்டுக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏதுமின்றி அமைதியாக இருக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

குற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை:

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து வருகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2020 முதல் 2025 மார்ச் வரை 301 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. காவல்துறையின் துரித நடவடிக்கையால் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. மேலும், 11 நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தும், கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட நபர்களில் 1,306 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கும் ஒரு காவலர் என்ற ரீதியில் நியமித்து, அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. அத்துடன் ஆகஸ்ட் 2023 முதல் இதுவரையில் 1,890 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டும், 2,327 குற்றவாளிளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 43 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு தூக்குத் தண்டனையும் 100 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் பெறப்பட்டுள்ளது.

சாதிய கொலைகள் நடக்கவில்லை:

மாவட்டம் முழுவதும் 7,077 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, இளஞ்சிறார்கள் தவறான வழியில் செல்லாமல் இருப்பதை தவிர்ப்பதற்காகப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 654 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சாதி ரீதியான குற்றங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து 269 கிராம விழிப்புணர்வு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றிய நபர்கள் மீது இதுவரை 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 105 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி ஊரக காவல் எல்கையில் கடந்த 2024 மற்றும் 2025 ம் ஆண்டுகளில் சாதிய கொலை எதுவும் நடைபெறவில்லை.

மேலும் மாநகர காவல் எல்கையில் பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் சாதிய கொலை எதுவும் நடைபெறவில்லை. சில ஊடகங்களில் கொலை நகரமாக மாறும் நெல்லை என மேற்கண்ட கொலை குறித்த புள்ளிவிவரங்களைத் தவறாகச் சித்தரித்து மிகைப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளது.

அதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திருநெல்வேலியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 285 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், சிறார்கள் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் துறை தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உண்மையை ஏற்க மறுக்கிறதா நெல்லை காவல்துறை?

கடந்த ஐந்து ஆண்டுகளில்  கொலை வழக்குகளில் 60 இளம் சிறார்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அதாவது, ஏற்கனவே திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் சாதிய வன்முறை அதிகரிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, நாங்குநேரி அருகே பிளஸ் 2 மாணவனை சக மாணவர்கள் வீடு புகுந்து சரமாரியாக அறிவாளால் தாக்கிய சம்பவம் அரங்கேறியது. இதுவும் முழுக்க முழுக்க சாதிய வன்முறையோடு நடந்த சம்பவம் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் சாதி வன்முறையோடு மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவம் தொடர் கதையாக நடைபெற்றது. சாதிய வன்முறையின் உச்சமாக கடத்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் பயின்று வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவரை, பேருந்திலிருந்து இறக்கி ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

தற்போது அந்த மாணவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்னதான் மாணவர்கள் மத்தியில் சாதி வன்முறையைத் தடுக்க காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினாலும் கூட, அது முழுமையான பலனை கொடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.