டில்லி

பிரதமர் மோடி பேசிய வானொலி நிகழ்வான மன் கி பாத் என்னும் நிகழ்வை அதிகம் பேர் கேட்பதில்லை என தகவல் தெரிவிக்கிறது.

பிரதமர் மோடி மாதம் ஒரு முறை மக்களிடம் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். இதற்கு தமிழில் மனதின் குரல் என பொருளாகும். சுமார் 20 நிமிடங்கள் நடைபெறும் இந்நிகழ்வு முதலில் இந்தியில் மட்டும் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதன் பிறகு ஒவ்வொரு மாநில மொழியும் சேர்க்கப்பட்டு தற்போது இந்நிகழ்வு இந்தி மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் ஒலிபரப்ப படுகின்றது.

இந்த நிகழ்வு எத்தனை பேரால் கேட்கப்படுகிறது என்னும் விவரத்தை கோரி யூசுப் நக்வி என்னும் ஆர்வலர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வினா எழுப்பி இருந்தார். இதற்கு அகில இந்திய வானொலி பதில் அளித்துள்ளது. இந்த பதிலில் எத்தனை பேரால் கேட்கப்படுகிறது என்னும் விவரம் அளிக்கப்படவில்லை. ஆனால் மொத்த நிகழ்வுகளில் இந்த நிகழ்வை கேட்பவரின் சதவிகிதம் வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்வை கடந்த 2015 ஆம் ஆண்டு சுமார் 30.82% பேர் கேட்டுள்ளனர். அடுத்த வருடமான 2016ஆம் வருடம் 25.82% ஆகி உள்ளது. அதற்கடுத்த வருடமான 2017ல் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 22.67% ஆகி உள்ளது. அதாவது வருடா வருடம் இந்த நிகழ்வை கேட்போர் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருவது தெரிந்துள்ளது.

நகரங்களில், இந்த நிகழ்வின் இந்தி மொழி ஒலிபரப்பை அதிக பட்சமாக பாட்னா நகரில் கேட்கின்றனர். அதே நேரத்தில் தென் இந்தியாவின் திருவனந்தபுரம் பகுதியில் ஒருவர் கூட கேட்பதில்லை. அதை போல அகமதாபாத் , நாக்பூர், ஜெய்ப்பூர், சிம்லா, ரோடாக், போபால், ஜம்மு உள்ளிட்ட நகரங்களிலும் மிகவும் குறைவான மக்களே இந்நிகழ்வை கேட்கின்றனர்.

நாடெங்கும் மொத்தம் உள்ள ரேடியோ நேயர்களில் 20-30% பேர் மட்டுமே இந்நிகழ்வை கேட்கின்றனர். பெரும்பாலான ரேடியோ நிகழ்வை பலர் கேட்காததின் முக்கிய காரணம் தொலைக்காட்சிகளின் தாக்கம் என பலரும் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் நாட்டின் பிரதமர் என்னும் முறையில் கூட மோடியின் உரையை அதிகம் பேர் கேட்காமல் இருந்துள்ளதால் இந்நிகழ்வு ஒரு தோல்வி அடைந்த நிகழ்வு எனவே வானொலி நேயர்களால் கருதப்படுகிறது.