நெட்டிசன்:

(வாட்ஸ்அப்)

சமீபத்தில் வெளியான ‘கதாநாயகன்’ படத்தில் தொடை நடுங்கியான அதன் நாயகன் தம்பிதுரை, மது அருத்திய பின்னரே பத்து ரவுடிகளை அடித்து வீழ்த்த அவருக்கு வீரமும் பலமும் வந்துவிடுவதாகக் காட்டுவதை தமிழகத் தணிக்கைகுழு எப்படி அனுமதித்தது என்றே தெரிய வில்லை. போதையில் ஒருவனால் வீரனாக மாறமுடியும் என்பதை தணிக்கைக் குழு ஒத்துக்கொள்கிறாதா?

உன்னைப் போன்ற கோழைக்கு பெண் தரமாட்டேன் என்று நாயகனை விரட்டுகிறார் நாயகியின் தந்தை. அந்த அவமானத்துக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மதுதான் உதவும் என்று நண்பனுடன் பாரில் தலைக்கேறக் குடிகிறான். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிச் சித்தரித்துக்கொண்டே இருப்பீர்கள்? இது போதா தென்று கதாநாயகனுக்கு குடிக்கக் கற்றுக்கொடுக்கிறார் அவரது நண்பர். இதுபோல் நேரடியான மது ஊக்குவிப்பு விளம்பரக் காட்சிகளை எழுதிப் படமாக்கும் இயக்குநர்கள் அந்தப் பாவக் கணக்கை எந்த கங்கையிலும் கழுவமுடியாது.

இப்படி மதுக்கடை காட்சிகளை திட்டமிட்டு கதையில் நுழைப்பதன் மூலம், படத்துக்கு வரிவிலக்கு பெறமுடியும் என்று நம்பும் தயாரிப்பாளரும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார் என்பதே உண்மை. அடுத்துவரும் தலைமுறைகளை மது அருந்தத் தூண்டும் இதுபோன்ற படங்களை எடுத்து நீங்கள் சம்பாதிப்பது பணமில்லை… பாவம். அது உங்கள் தலைமுறைகளை துரத்தும் என்பது உங்களுக்கு தெரியாதென்றால் தெரிந்துகொள்ளுங்கள்.