சென்னை:

பாமக அதிமுக கூட்டணியை எதிர்த்து, பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், இன்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தலைவர் டிடிவி தினகரனை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது படம் இல்லாமல் சும்மா சுற்றிக்கொண்டிருக்கும் ரஞ்சித் சில லட்சங்களுக்கு ஆசைப்பட்டு அமமுகவில் இணைந்துள்ளதாகவும் சமூக வலை தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது..

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைப்பதில் சுறுசுறுப் புடன் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பாஜக கூட்டணியில் பாமகவும் இணைந்துள்ளது. பாமகவுக்கு 7+1=8 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,   அதிமுக – பாமக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவின் மாநில துணைத்தலைவர் பதவி வகித்து வந்த நடிகர் ரஞ்சித், பாமக மீது சரமாரியாக குற்றம் சாட்டி அக்கட்சியில் இருந்து விலகினார்.

தான் கட்சியில் இருந்து விலக காரணம் என்ன என்பது குறித்து கூறியவர்இ   அதிமுக அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் புகார் கூறிவிட்டு அவர்களுடனே கூட்டணி அமைத்துள்ளது வேதனை அளிப்பதாகவும்,  தொண்டர்களிடம் கருத்துக் கேட்காமல் கூட்டணி அமைத்ததன் மூலம், தன்னை நம்பி வந்த இளைஞர்கள் தலையில் பாமக மண்ணை அள்ளிப் போட்டு விட்டதாகவும் கடுமையாக சாடினார்.

இந்த நிலையில் பாமகவில் இருந்து வெளியேறும் அதிருப்தி தலைவர்களை தங்கள்து கட்சியில் இணைக்க  மற்ற அரசியல் கட்சிகள் வலைவீசி வரும் நிலையில், ஏற்கனவே பாமகவில் இருந்து விலகிய பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியாவை, மக்கள் நீதி மய்யம் தங்களது கட்சியில் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் ரஞ்சித்,  டிடிவி தினகரனின் வலைக்குள் சிக்கிவிட்டதாக கூறப்பட்டது.

இந்த பரபரப்பான தமிழக அரசியல்  சூழ்நிலையில், இன்று காலை  அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவியை சந்தித்த ரஞ்சித் தன்னை அமமுக கட்சி உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித்,  இளைஞர்கள் எதிர்பார்க்கும் தலைவர் டிடிவி தினகரன் என்றும், அவரது தலைமை  நல்ல தலைமை, டிடிவி தினகரன் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவர்.. எனவேதான் அவரை  தேர்வு செய்து அமமுக வில் இணைந்தேன் என்று புகழாரம் சூட்டினார்.

ரஞ்சித் அமமுகவில் சேர்ந்ததை சமூக வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஊழல் கட்சியுடன் பாமக கூட்டணி சேர்ந்ததால், அங்கிருந்து விலகிய ரஞ்சித், ஊழலுக்கு பிள்ளை யார் சூழி போட்டும், ஜெ. ஆட்சியின்போது  கோடிகோடியாக கொள்ளையடித்த  மன்னார்குடி மாபியா குடும்பத்தை சேர்ந்தவரின் கட்சியில் இணைந்துள்ளது நகைப்புக்குரியது என்று விமர்சிக்கின்றனர்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த ரஞ்சித் சில லட்சங்களுக்காக தனது லட்சியத்தை விற்று விட்டதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.