மக்கள் எழுச்சி நீதி கூட்டணி: மணிப்பூர் இரோம் ஷர்மிளா புதிய கட்சி தொடங்கினார்!

Must read

sharmila
இம்பால்:
மணிப்பூர் இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா புதிய கட்சியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என கட்சிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார்.
அசாம் ரைபிள்ஸ் படையினரால் 2000-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தனது 27-வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 16 ஆண்டுகளாக பட்டினி கிடந்து போராடினார்.
உண்ணாவிரதம் தொடங்கிய 3-வது நாளில் மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து  அவரை கைது செய்த போலீசார்  பலவந்தமாக சிகிச்சை அளித்தனர்.
irom
கடந்த ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இரோம் ஷர்மிளா அறிவித்தார். அதையடுத்து  அவருக்கு இம்பால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமீனில் விடுதலையான இரோம் ஷர்மிளா, அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல் அமைச்சராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து அவரை முற்றிலுமாக விடுவித்து இம்பால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இனி இரோம் ஷர்மிளா சுதந்திரமாக செயல்படலாம் என்று நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐரோம் ஷர்மிளா, புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும், தனது கட்சி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதற்கு தீவிரமாக போராடும் என்றும் கூறினார்.
அதன்படி இம்பாலில் இன்று புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் இரோம் ஷர்மிளா.
கட்சியின் பெயர் மக்கள் எழுச்சி நீதி கூட்டணி. கட்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவதாக கூறினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே அரசியல் குறித்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து ஆலோசனைகள் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, ஆலோசனை கேட்க திட்டமிட்டுள்ளதாக, இரோம் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.
 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article