திருவனந்தபுரம்:

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர தனது மகனை இஸ்லாம் ஆராய்ச்சி அறக்கட்டளை மேலாளர் கட்டாயப்படுத்தினார் என்று அந்த அமைப்பில் சேர்ந்த கேரளா வாலிபரின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜாகிர் நாய்க் தலைமையிலான இஸ்லாம் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) கவுரவு உறவு மேலாளாராக இருப்பவர் ஆர்ஷி குரெஷி. கேரள இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைய குரெஷி வற்புறுத்தியதாக தேசிய புலனாய்வு பிரிவினரால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீதான குற்றப்பத்திரிக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவி படேல் முன்பு கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கேரளா இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர கட்டாயப்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் இதற்கு அனுமதி வழங்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதற்காக கடந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய அஷ்பக் மஜித் என்பவரது தாய் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குரெஷி மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘‘தனது நண்பர்களை தொடர்பு கொண்டு ‘ஆர்ஷி பாய்’ ஆலோசனைகளை பெற டோங்கிரியில் உள்ள ஐஆர்எப்.க்கு செல்லுமாறு மஜித் வலியுறுத்தினான்’’ என்று அவரது தாய் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதற்கு முன்பு தனது மனைவி, குழந்தைகளுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு குரான் குறித்து படிக்க குரெஷி செலவில் மஜித் சென்று வந்தார் என்றும் அவரது தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் பின்னர் தான் மே மாதம் வீட்டை விட்டு மஜித் வெளியேறியுள்ளார்.

குரெஷி கைது செய்யப்பட்டதற்கு பிறகு ஐஆர்எப் சார்பில் கடந்த ஆண்டு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்‘‘மதமாற்றம் ஐஆர்எப் நோக்கமல்ல. இஸ்லாம் குறித்தும், அதன் மீதான தவறான புரிதல் குறித்தும் பிரச்சாரம் செய்வது மட்டுமே நோக்கமாகும். இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது. குரெஷி ஒருவரை கூட அவரது சுதந்திரத்திற்கு மாற்றாக மத மாற்றம் செய்ய வலியுறுத்தவில்லை. இது இஸ்லாமுக்கு எதிரானதாகும். இது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களையும மறுக்கிறோம்’’ என்று தெரிவித்தினர்.

கேரளா இளைஞர், அவரது மைத்துனர், சகோதரியை கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் குரெஷி கைது செய்யப்பட்டார். மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக சண்டையிட இவர்களை அனுப்பியதாக கேரளா போலீசார் குரெஷி மீது குற்றம்சாட்டியுள்ளனர்.