லக்னோ,

இந்தியாவே எதிர்பார்த்த உத்திரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மிகமோசமான தோல்வியை பெற்றுள்ளன. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

சாதி ஆதிக்கமும், மத மோதல்களும் அதிகளவு உள்ள உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலம் இந்துத்துவா சக்திகளிடம் சிக்கியிருப்பது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்  என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. குடும்ப அரசியலும், அதிகார அரசியலும் அதைத் தொடர்ந்து ஊழலும், ஆட்சிமாற்றம் நடக்க காரணமாக இருந்திருக்கலாம். இந்நிலையில் உத்திரப்பிரதேச தேர்தல் முடிவு குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ் ட்விட்டர் மூலம் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

 

வெற்றியும் தோல்வியும் அரசியலில் சாதாரணம். இதற்கு முன்பே பலமுறை தோற்றுள்ளோம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம் என்றும் அதுபோல்தான் இது என்றும் முலாயம் தெரிவித்துள்ளார். மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக கூறியுள்ள முலாயம், ஏராளமான வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துள்ள பாஜக அதை காப்பாற்றுவார்களா என பார்ப்போம், உறுதியளித்தபடி வேலை வாய்ப்பை உருவாக்குவார்களா என்பதையும் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மக்களை ஆறுதல் படுத்த முடியவில்லை. இந்த தோல்விக்கு யாரையும் காரணம் காட்டமுடியாது என்றும் முலாயம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.