சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுக்கு பெரியளவிலான வரவேற்பை பெற்றது ஐஆர்சிடிசி…

Must read

புதுடெல்லி:
சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுக்கு பெரியளவிலான வரவேற்பை பெற்றது ஐஆர்சிடிசி.  ரயில் முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இன்று  முதல் 15 ரயில்கள் இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்தது. ஐஆர்சிடிசி-யில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் ரயில் நிலையங்களில் நேரடியாக பயணச் சீட்டு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், இதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால், எண்ணற்ற பயணிகள் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி தளத்தில் குவிந்ததாகத் தெரிகிறது. இதனால், ஐஆர்சிடிசி முடங்கியது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி விளக்கம் அளித்தது. சிறப்பு ரயில்கள் குறித்த அட்டவணையை பதிவேற்றம் செய்ததில் தாமதம் ஏற்பட்டதாகவும், மாலை 6 மணிக்கு, ரயில்வே புக்கிங் தொடங்கும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்தது.

ஆனால் 7 மணிவரையிலும் கூட எந்த டிக்கெட்டையும் புக் செய்ய முடியவில்லை. மக்கள் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குமுறினார்கள்.. சர்வர் முடங்கிவிட்டதால், இந்த நிலை ஏற்பட்டுவிட்டதாக தெரியவந்தது.

ஒரு வழியாக ரயில்களில் இரவு 9 மணி அளவில் முன்பதிவு நடந்தது 9.15 மணிக்குள் சுமார் 54 ஆயிரம் பேர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். சுமார் 30,000 பிஎன்ஆர்கள் உருவாக்கப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்தது. ஆனால் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

More articles

Latest article