சென்னை:

பிஎல் தொடரின்  50வது லீக் ஆட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.  சிஎஸ்கே டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கேப்டன் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்ஸ் மற்றும் அதிரடி காரணமாக சிஎஸ்கே மிரட்டலான வெற்றியை பெற்று மீண்டும் முதலிடத்தில் உட்கார்ந்தது.

ஐபிஎல் தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்று டெல்லி அணியுடன் மோதியது. நேற்றைய போட்டியில், தோனி மீண்டும் களமிறங்கிய நிலையில், முரளி விஜய், துருவ் ஷோரே, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் நீக்கப்பட்டு, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

அதுபோல டெல்லி அணியில் “ ரபடா, இஷாந்த் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டிரென்ட் பவுல்ட், ஜே.சுசித் இடம் பெற்றனர்.

இந்த நிலையில், ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பவுலிங்கை தேர்வு செய்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் களாக  ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கி னர்.  தொடக்க்ததில் தடுமாற்றம் கண்ட வாட்சன் 9 பந்தில் ரன் ஏதுமின்றி ஆட்டம் இழந்தார்.

முதல் 4 ஓவர்களில் சென்னை அணி வெறும் 7 ரன் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து களமிறங்கிய  துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, பிளிஸ்சிஸ்சுடன் கைகோர்த்தார். இருவரும் அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். 8.5 ஓவர்களில் சென்னை அணி 50 ரன்களை தொட்டது. ரூதர்போர்டு, அக்‌ஷர் பட்டேலின் ஓவர்களில் சிக்சர் அடித்த பிளிஸ்சிஸ் 39 ரன்களில் (41 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி அடியெடுத்து வைத்தார்.

மறுமுனையில சுசித்தின் சுழலில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய சுரேஷ் ரெய்னா (59 ரன், 37 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதே ஓவரில் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து பந்தை தூக்கிய போது கேட்ச் ஆனார். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் ரெய்னாவின் 50-வது அரைசதமாக இது அமைந்தது. ரெய்னாவைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா வந்தார்.

டோனி, ஜடேஜா ஜோடியால் இறுதி கட்டத்தில் ஆட்டம் சூடுபிடித்தது.  கடைசி நேர ஆட்டம் கலகலப்பாக நடைபெற்றது. ஜடேஜா 10 பந்தில், 2 பவுண்டரி, 2 சிக்சர் உடன் 25 ரன்கள் எடுத்திருந்தார்.டோனியோ தனது அதிரடி ஆட்டம்காரணமாக கடைசி ஓவரில், ஒரு பவுண்டரி, 2 சிக்சரோடு இன்னிங்சை நிறைவு செய்தார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் சென்னை பேட்ஸ்மேன்கள் 91 ரன்களை திரட்டினர்.

டோனி 44 ரன்களுடனும் (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), அம்பத்தி ராயுடு 5 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். டெல்லி தரப்பில் சுசித் 2 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ், அக்‌ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து  180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை இம்ரான் தாஹிரும் ஜடேஜாவும் தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினர். இந்த நிலையில் டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நின்று ஆடி  அரைசதத்தை நெருங்கினார். 83 ரன்களுக்கே டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருடன் கிறிஸ் மோரிஸ் ஜோடி சேர்ந்தார். எனினும் கிறிஸ் மோரிஸ் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கால் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா வீசிய 12வது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட மோரிஸ், பந்தை அடிக்க முயலும்போது பேலன்ஸ் மிஸ்ஸாகி காலை சற்று தூக்கிவிட்டு கீழே வைத்தார். ஆனால் அவரது கால் கிரீஸை விட்டு வெளியே வரவில்லை. கிரீஸுக்குள்ளேயே தான் இருந்தது. எனினும் பேலன்ஸ் மிஸ்ஸாகி தூக்கிவிட்டு மீண்டும் வைக்கும் இடைவெளியில் கண்ணி மைக்கும் நொடியில் ஸ்டம்பிங் செய்தார் தோனி.

இதையடுத்து மோரிஸ் கோல்டன் டக்காகி வெளியேற, அந்த ஓவரின் கடைசி பந்தில் மோரிஸ் அவுட்டானதை போலவே ஷ்ரேயாஸ் ஐயரும் அவுட்டானார். ஷ்ரேயாஸும் காலை தூக்கி வைக்கும் நொடிப்பொழுதில் ஸ்டம்பிங் செய்து மிரட்டினார் தோனி.

ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்கும்வரை டெல்லி அணிக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை யையும் 12வது ஓவரிலேயே சிதைத்து சிஎஸ்கே அணியின் அபார வெற்றியை உறுதி செய்தார் தோனி. ஆட்ட நாயகனாகவும் டோனி தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின்னர் அந்த அணி அடுத்த 2 விக்கெட்டுகளையும் விரைவில் இழந்துவிட சிஎஸ்கே 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.