மும்பை:

பிஎல் தொடரின் 27வது லீக் போட்டி இன்று  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மாலை 4 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில், ராஜஸ்தான் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியால் மும்பையை வீழ்த்தி  ராஜஸ்தான் அணி.4 விக்கெட்டில்  வெற்றி பெற்றது.

இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியா ரகானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணி மட்டையுடன் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக  ரோகித் சர்மாவும், டி காக்கும் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே தங்களது அதிரடியை காட்டத் தொடங்கினர். இதன் காரணமாக அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.

இந்த நிலையில், ராஜஸ்தான் பவுலர் ஜேப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில், ரோகித் சர்மா 32 பந்தில் ஒரு சிக்சர், 6 பவுண்டரியுடன் 47 ரன்னில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து   சூர்யகுமார் 16 ரன்னிலும், பொலார்டு 6 ரன்னிலும் அவுட்டாகினர். டி காக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர், 81 ரன் எடுத்திருந்தபோது,  ஜேப்ரா ஆர்ச்சர் பந்தில், பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் 52 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரியுடன் 81 ரன் எடுத்திருந்தார்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 11 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இதைத் தொடர்ந்து,  188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  ரகானேவும், ஜோஸ் பட்லரும் இறங்கினர்.  இருவரும் ஆரம்பம் முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை ஆடி மிரள வைத்தனர்.

அணியின் ஸ்கோர் 60 ஆக இருந்தபோது ரகானே குணால்பான்ட்யா பந்து வீச்சில்  37 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் பட்லருடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தனர். அணியின் ஸ்கோர் 50 ரன்களை தாண்டிய நிலையில்,  சஞ்சு சாம்சன் 31 ரன்னில் வெளியேற, ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திருப்தி,  லியாம் லிவிங்ஸ்டன் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்த நிலையில்,  சிறப்பாக ஆடிய ஜோஸ் பட்லர்  89 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் சாஹரின் பந்து வீச்சில், சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்தார். அவ்ர 43 பந்துகளில்  7 சிக்சர், 8 பவுண்டரி அடித்து அசத்தியிருந்தார்.

கடைசியாக ஸ்ரேயாஸ் கோபால், கிருஷ்ணப்பா கவுதமும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் நிதானமாக ஆடி ரன்களை எடுத்து வந்தனர். ஸ்ரேயாஸ் கோபால் 7 பந்தில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து  4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வெற்றி கண்டது.

ஆட்ட நாயகனாக ஜோஸ் பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.