சென்னை

சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கேரளாவுக்கு மாற்றப்படுவதாக வந்த செய்திகள் தவறானது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது காவிரி மேலாண்மை அமைக்காததை ஒட்டி மாநிலம் எங்கும் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.   இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தேவை இல்லை என எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.    அதிலும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் விளையாடும் போட்டிகள் சென்னையில் நடந்தால் கடும் கலவரம் நிகழும் என கூறப்பட்டது.

இதையொட்டி சில ஊடகங்கள் சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியிட்டன.   அத்துடன் கேரள கிரிக்கெட் சங்க காரியதரிசி ஜோசப் ஜார்ஜ், இது குறித்து தாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரியுடனும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையுடனும் பேசியதாக தெரிவித்தார்.   இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப் போல ரசிகர்களுக்கு ஆனது.

இந்நிலையில் இது குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அதிகாரி விஸ்வநாதன், “ஐபிஎல் போட்டிகளை இடம் மாற்றப் போவதாக வந்த செய்திகள் தவறானவை.   நான் சனிக்கிழமை அன்று ஜோசப் ஜார்ஜ் அவர்களை சந்தித்து பேசினேன்.   ஆனால் அப்போது ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் பற்றி எதுவும் பேசவில்லை.  வேறு பல பொதுவான விஷயங்களைப் பேசினோம். “ என தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சௌத்ரி,  “எனக்கு தெரிந்து அப்படி ஒரு யோசனை யாரும் கூறவில்லை.   இடமாற்றம் குறித்து நாங்கள் எதுவும் யோடிக்கவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.