டில்லி

ழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி இடத்தில் பொய் சான்றிதழ் அளித்து மகனை சேர்த்த தந்தை ஒருவர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் வருடம் பாலிவுட் திரைப்படமான ’இந்தி மீடியம்’ திரைப்படம் வெளியானது.   இந்தப் படத்தில் கதாநாயகன் இர்ஃபான் கான் தனது மகனை ஒரு புகழ் பெற்ற பள்ளியில் சேர்க்க  தாம் ஏழை என பொய் சான்றிதழ் கொடுப்பார்.   அதனால் ஏற்படும் விளைவுகளைக் கூறும் விதமாக கதை அமைந்திருந்தது.   தற்போது டில்லியில் ஒரு தந்தை அதே விதமாக தன் மகனை பள்ளியில் சேர்த்துள்ளார்.

              கௌரவ் கோயல்

டில்லியை சேர்ந்தவர் கௌரவ் கோயல்.   இவரது மகனை இங்குள்ள ஒரு பிரபல பள்ளியில் சேர்க்க விரும்பினார்.   அந்த பள்ளியில் பொருளாதாரத்தில் பின் தங்கி ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது.    கௌரவ் தனக்கு மிகக் குறைந்த வருமானம் உள்ளதாக வருமான வரி அதிகாரிகளுக்கு தவறான தகவல் கொடுத்தார்.    அத்துடன் தவறான வசிக்கும் இடத்தையும் காட்டினார்.

இதை ஒட்டி அவருக்கு 2013ஆம் வருடம் ஏழ்மை நிலையில் உள்ளவர் என சான்றிதழ் கிடைத்துள்ளது.   அதைக் காட்டி தனது மகனுக்கு அந்த புகழ் பெற்ற கல்வி நிலையத்தில் இடம் வாங்கினார்.    ஆனால் பள்ளி நிர்வாகம் இந்த மோசடியைக் கண்டு பிடித்து கௌரவ் கோயல் மீது புகார் ஒன்றை அளித்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் கௌரவ் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தக் குற்றச்சாட்டை கௌரவ் கோயல் மறுத்துள்ளார்.  ஐந்து வருடங்களுக்கு முன்பு அவர் பொருளாதாரத்தில் பின் தங்கி ஏழ்மை நிலையில் இருந்ததாகவும்,  பொய்யான தகவல் அளிக்கவில்லை எனவும்  கூறி உள்ளார்.