சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட் டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த போட்டியை நடத்த விடமாட்டோம் என  பல அரசியல் கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.  ஆனால், திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சுற்றி 5ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதி பொதுமக்கள் கடும் கெடுபிடிகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,  அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்ல முடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?

என்று பதிவிட்டுள்ளார்.

இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் பேனர்கள், கொடிகள், செல்போன்கள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குடிக்க தண்ணீர் கூட கொண்டு வரக்கூடாது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இத்தனை கட்டுப்பாடுகளை மீறி எதற்கு ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாசும்,   விளையாட்ட தவிர்க்கப் போறியா? இல்ல தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.