நியூயார்க்: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு இந்தியா உள்பட பல உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்து உள்ளது.

நேட்டோ விவகாரத்தில் உக்ரைன்மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ந்தேதி போர் தொடுத்தது. தொடர்ந்து 22 நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் இரு தரப்புக்கும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைனின் பல பகுதிகளில் குண்டுவீச்சால் நொறுங்கி வருகின்றனர்.

இதற்கிடையில் இரு நாடுகளும் போரை கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியா உள்பட பல உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருந்தாலும் அதில் முடிவு எட்டப்படாததால், தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.

இதையடுத்து ரஷ்யா போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதற்கு இந்தியா மற்றும்   13 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.  இந்தியா தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் பிரதிநிதியாக பங்கேற்றிருந்த நீதிபதி தல்வீர் பண்டாரி, தீர்ப்புக்கு ஆதரவாக வாக்களித்தார். சர்வதேச நீமன்றத்தின் தீர்ப்பு போரை நிறுத்த வழிவகுக்கும் என்பதால், இந்தியா தரப்பில் ஆதரவு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் தீர்ப்பிற்கு எதிராக வாக்களித்தனர்.

ரஷ்யாவின் துணைத் தலைவர் கிரில் கெவோர்ஜியன் மற்றும் சீனாவின் நீதிபதி Xue Hanqin கருத்து வேறுபாடுகளுடன் தீர்ப்புக்கு எதிராக வாக்களித்தனர். 13க்கு இரண்டு வாக்குகள் மூலம், ICJ ரஷ்யா “பிப்ரவரி 24 அன்று தொடங்கிய இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும்” என்று தீர்ப்பளித்தது.

இநத் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் முறையிட்டது. இதையடுத்து, சர்வதேச நீதிமன்றம் நேற்று கூடி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து விவாதித்தது உத்தரவிட்டது.

உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை ‘உடனடியாக நிறுத்திவைக்க’ ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்,  இரு நாடுகளும் போர் நடவடிக்கையை கைவிட்டு,  பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும்,  ரஷ்யா தனது இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இனப்படுகொலையை கையாள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ‘உலக நீதிமன்றம்’ வழங்கிய முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஒரு ட்வீட்டில், பெரும்பான்மை முடிவு “அமைதிக்கான எனது தொடர்ச்சியான வேண்டுகோளை முழுமையாக வலுப்படுத்துகிறது” என்று கூறினார்.