சென்னை

டப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் 3 பதவிகள் வகிப்பதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

விரைவில் அதிமுகவில் உள்கட்சித் தேர்தல்கள் நடக்க உள்ளன.  இதுவரை கிளைக் கழக தேர்தல் முதல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் ஆகியவற்றுக்குத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கி விட்டது. கட்சியின் பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி வருகிற 23ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல், தலைவர்களுக்கிடையே உள்ள மோதல்கள், பாஜக ஆதரவால் கட்சிக்கு பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப 2ம் கட்டத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்து அவர் மட்டும் 3 பதவிகளை தன்னிடம் வைத்துள்ளார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலையச் செயலாளர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர் என இருவருமே 3 பதவிகளை வகித்து வருகின்றனர்.

கட்சியின் மூத்த தலைவர்களாக கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், ஆகியோர் துணை ஒருங்கிணைப்பாளர்கள், துணை பொதுச் செயலாளர்களாகவும் உள்ளனர்.  ஆகவே கட்சிக்குள் மூத்த தலைவர்களிடம் மட்டுமே அதிக பதவிகளும், அதிகாரங்களும் குவிந்து கிடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆகவே அவர்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்து விட்டு 2ம் கட்டத் தலைவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. . இதில் பன்னீர்செல்வத்திடம் உள்ள பொருளாளர் பதவிக்கு வேலுமணியும், தங்கமணியும் குறி வைத்து தீவிரமாகத் தனது ஆதரவாளர்கள் மூலம் தலைவர்களுக்குக் கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டனர்.

அதைப்போல, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் தனக்குப் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்.  இவருக்கு ஆதரவாக சில முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் களம் இறங்கியுள்ளனர்.  இந்தப் பிரச்சினைகளை அதிமுக பொதுக்குழுவில் எழுப்ப 2ம் கட்டத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தவிர மாவட்டச் செயலாளர்கள் பலர் அமைப்புச் செயலாளராகவும் உள்ளனர். இதில் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் 2 பதவிகளை வகித்துள்ளனர். ஆகவே ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அதிமுகவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் பொதுக்குழுவில் பூகம்பம் ஏற்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.