சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுமீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறு முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், 2022ம் ஆண்டு ஜனவரி  26ம் தேதிக்குள் தேர்தலை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்தது. அதன்படி, தேர்தல் ஆணையமும், தேர்தல் பணிகளை முடுக்கி விட்டது. நாளை (26ந்தேதி) உடன் உச்சநீதிமன்ற கெடு முடிவடைய உள்ளதால் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரியிருக்கிறார்.

இதே சங்கர் என்பவர்தான், ஏற்கனவே உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, ஜனவரி 26ந்தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவு பெற்ற நிலையில், தற்போது,  அவகாசம் கேட்டு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீது விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.