இன்று நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய், வாக்குச்சாவடிக்கு சைக்கிள் ஓட்டிவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெட்ரோல் விலை உயர்வை குறிப்பால் உணர்த்தவே, அவர் சைக்கிளில் வந்ததாக பரபரப்பு கிளம்பியது, நேரத்தை மிச்சப்படுத்தவே சைக்கிளில் வந்ததாக தளபதியின் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
நடந்து வருவதை விட சைக்கிளில் வருவது நேரம் மிச்சப்படும் என்றால் பைக்கிலோ, காரிலோ வந்திருந்தால் இன்னும் அதிக நேரம் மிச்சமாகி இருக்குமல்லவா ? அவர் பெட்ரோல் விலை காரணமாக தான் சைக்கிளில் வந்தார் என்று அதற்கும் சில ரசிகர்கள் பதில் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடம் மிகவும் குறுகலான இடம் அதனால் காரை நிறுத்துவதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் சைக்கிளில் வந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவரது ரசிகர்கள், நடிகர் விஜய் சைக்கிளில் பயணிப்பது இது முதல் முறையல்ல என்றும், அவர் அனைவருடனும் மிகவும் எளிமையாக பழகக்கூடியவர் என்றும் தெரிவித்தனர்.
மேலும், சிறு வயதில் மிக பிரபல இயக்குனரின் மகனாக அறியப்பட்ட நாட்களில் கூட சாலிகிராமம் பகுதியில் அமைந்துள்ள பாலலோக் பள்ளிக்கு தனது தந்தையின் காரில் வராமல், தினமும் சைக்கிளில் தான் பள்ளிக்கு வருவார் என்று குறிப்பிடுகின்றனர்.