சென்னை:

சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் கறுப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திதிருவல்லிக்கேணி பகுதியிலிருந்து பேரணியாக வந்து சேப்பாக்கம் மைதானத்தை முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போராட்டம் நடத்த முயன்ற சிலரையும் போலீசார் கைது செய்தனர். நாம் தமிழர் இயக்கம், விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை கட்சியினர், திரையுலகினர் என பலதரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணா சாலை ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை வாலாஜா சாலையில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பல்வேறு சாலைகளில் சேப்பாக்கம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.