தியேட்டர்களில் சட்டத்துக்குப் புறம்பாக  கூடுதல் கட்டணம் விதிக்கக்கூடாது என்று நேர்மையுடன் செயல்படும் ஊர்களில் “கபாலி” திரைப்படம் திரையிடப்படவில்லை.
தியேட்டர்களில் வசூலிக்க வேண்டிய கட்டணத்தொகையை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் புதுப்படங்கள் வெளியாகும் போது சட்டத்துக்குப் புறம்பாக,  தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.
இந்த நிலையில் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் இன்று தமிழகத்தில் வெளியாகிறது. வழக்கம்போல, பெரும்பாலான தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  சென்னை போன்ற பெரு நகரங்களில் 3000 ரூபாய் வரை விலை வைத்து முன் பதிவு டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ரஜினி ரசிகர்களே தியேட்டர் முன் போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி அரசு அலுவலர்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் சில ஊர்களில் மட்டும் நேர்மையும் துணிவும் கொண்ட அதிகாரிகள், “சட்டத்துக்கு புறம்பாக தியேட்டர்களில் கூடுதல்  கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தனர்.
1
இதையடுத்து அந்த ஊர் தியேட்டர் நிர்வாகத்தினர், “ கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால்தான், முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூல் செய்தால் நட்டம் ஏற்படும்” என்று கூறி கபாலி படத்தை வெளியிடாமல் இருக்கிறார்கள்.
இதற்கு ஒரு உதாரணம், ஓசூர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர் பகுதியில், நான்கு சினிமா தியேட்டர்கள் உள்ளன. அரசு நிர்ணயித்தபடி முப்பது ரூபாய்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால்  கடந்த சில மாதங்களுக்கு முன், பாகுபலி படத்தை திரையிட்ட மூன்று தியேட்டர்களில் 100 முதல், 150 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதையறிந்த, ஓசூர் சப்-கலெக்டர் செந்தில்ராஜ், தியேட்டர்களில் சோதனை நடத்தி, அரசாணை படி, நகராட்சியில் உள்ள ஏ.சி., இல்லாத தியேட்டர்களில், 30 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டார். கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இதையடுத்து, ஓசூர் தியேட்டர்களில் தற்போது டிக்கெட் கட்டணம், 30 ரூபாய்  வசூலிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதோடு, தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது.
ஆனால், “ரஜினி நடித்துள்ள கபாலி படத்தை ரிலீஸ் செய்ய, ஒரு டிக்கெட்டுக்கு, 200 ரூபாய் கட்டணம் வசூல் செய்தால் மட்டுமே, படத்தை திரையிட உரிமையை வழங்குவோம்” என்று தியேட்டர் நிர்வாகத்தினரிடம் கபாலி, வினியோதஸ்கர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால்  நேர்மையான  சப்-கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவை மீறி, 200 ரூபாய் கட்டணம் வசூல் செய்ய முடியாது என்பதால், ஓசூரில்  இன்று கபாலி படம் ரிலீஸ் ஆகாது என, தியேட்டர் உரிமையாளர்கள்  தெரிவித்துள்ளனர்.
அதே போல பெரம்பலூர் பகுதியில் உள்ள தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப் பகுதி கோட்டாட்சியர் பேபி எச்சரித்துள்ளார். இதனால் இங்கும் இன்று கபாலி படம் வெளியாகாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் தமிழகம் முழுதும் பெரும்பாலான ஊர்களில் இன்று கபாலி திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.