டில்லி

ல முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயம் ஆக்கி உள்ளன.

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.   தற்போது 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.   மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.   ஆயினும் தடுப்பூசி பற்றாக்குறையால் இந்த பணிகள் சற்று தாமதமாகி வருகின்றன.

சென்ற ஓராண்டு காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இதற்கான பணத்துக்குக் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.   இதன் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்குக் காப்பிடு வழங்கி வருகின்றன.  இதைத் தடுக்க தற்போது சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் சேர கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் ஆகி உள்ளது.

பிரபல காப்பீடு நிறுவனங்களான  மாக்ஸ் லைஃப் மற்றும்  டாடா ஏ ஐ ஏ ஆகிய நிறுவனங்கள் டேர்ம்ஸ் காப்பீடு எனப்படும் காலமுறை காப்பீட்டுத் திட்டத்தில் இணைய 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்கியிருக்கின்றன.  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்குத் தனது சுகாதார பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தில் 5 விழுக்காடு வரை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தள்ளுபடி அளித்திருக்கிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொடர்பான காப்பீட்டு உரிமை கோரல்கள் மிக அதிக அளவில் இருந்ததாக ஐ.சி.ஐ.சி.ஐ. தெரிவித்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 2,620 கோடி ரூபாய் அளவிற்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாம் அலையை விட இரண்டாம் அலையில் உரிமை கோரல்கள் (பாலிசி கிளைம்) பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.    அதே வேளையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பாதிப்பு அதிக அளவில் இருக்காது  என்பதால் காப்பீட்டு நிறுவனங்கள் உரிமை கோரல்களைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளன.   இதன் மூலம் நிறுவனங்களின் நிதி ஆதாரமும் பாதுகாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.