அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான புஷ்பா படத்தை திரை பிரபலங்கள் மட்டுமன்றி கிரிக்கெட் பிரபலங்கள், போலீசார் என பல்தரப்பினரும் பார்த்து சமூக வலைதளத்தில் பார்த்து மீம்ஸ் போட்டு வரும் வேளையில் இந்த பட பாணியில் கடத்தலில் ஈடுபட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த அல்லு அர்ஜுன் செம்மர கட்டைகளை லாரியில் ஏற்றி அதன் மேல் பால் கேன்களை வைத்து பால் வண்டி போல் செட்டப் செய்திருப்பார்.

இதே பாணியில் கர்நாடகா-ஆந்திரா எல்லையில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு செம்மரங்களை கடத்திய யாசின் இணையத்துல்லா மகாராஷ்டிரா போலீசாரிடம் சிக்கினார்.

ரூ. 2.45 கோடி மதிப்புள்ள இந்த செம்மர கட்டைகள் மீது பழம் மற்றும் காய்கறிகளை ஏற்றிய யாசின் அதன் மீது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிப்பதற்கான அத்தியாவசிய பொருட்கள் என்ற வாசகம் அடங்கிய பேப்பரையும் ஒட்டியிருந்தார்.

ஆந்திர எல்லையை எந்த வித இடையூறும் இல்லாமல் கடந்த யாசினுக்கு மகாராஷ்டிரா எல்லையில் ஏற்பட்ட இந்த ட்விஸ்ட் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, போலீசாரிடம் சிக்கியதும் புஷ்பா பட கதையை கூறிய யாசின் அதே பாணியில் கடத்த நினைத்து சிக்கிக்கொண்டதாக கூறியுள்ளார்.