சென்னை: பதிவுத்துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்க பழைய பத்திரங்கள் ஆய்வு செய்வது கட்டாயம் என உத்தரவிடப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ்நாட்டில், முறைகேடான முறையில், போலி பத்திரங்கள் மூலம்  சொத்து விற்பனை பதிவுகள் அதிகரித்து வரும் நிலையில்,  தாய் பத்திரம் எனப்படும் பழைய பத்திரங்களை சரி பார்ப்பதில் அதிகாரிகள்  அலட்சியம் காட்டுவதால்தான், போலி பதிவுகள் அதிகரித்து உள்ளதாகவும், அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தால், அந்த  பதிவாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை தயாராகி வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார் – பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனைக்கான பத்திரங்களை பதிவு செய்யும் போது மோசடியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 101ஃம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், பத்திரப்பதிவு மோசடிகளை தடுக்க,  2021ல்,  பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை செய்திருந்தது.. இந்த திருத்தங்கள், 2022 ஆகஸ்ட், 16ந்தேதி முதல்  அமலுக்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி மோசடி புகார் குறித்து விசாரித்து, உண்மை என தெரிய வரும் பட்சத்தில் மாவட்ட பதிவாளரே அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுபொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நீதிமன்றமும் பாராட்டுக்களை தெரிவித்தது. ஆனால், போலி பத்திர பதிவுக்கு உடந்தையாக இருக்கும் பதிவுத்துறை அதிகாரிகள், இதை எப்படி கண்டுபிடிப்பார்கள்,  என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதனால்,   மோசடி பத்திரங்களை ரத்து செய்வதில், சில சிக்கல்கள் நீடித்து வருகின்றன.

இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், பத்திரப்பதிவு விதிமுறைகளில் திருத்தம் செய்ய, பதிவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, திருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொதுவாக, மோசடி பத்திரம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளரை ஏமாற்றி சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரபதிவு செய்தால் அதுதான் மோசடி பத்திரம் ஆகும். போலியாக ஒரு உரிமை ஆவணத்தை உருவாக்கி, அந்த போலி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சொத்துரிமையை மாற்றம் செய்தால், அந்த பத்திரமும் மோசடி பத்திரமாகும். போலியாக பட்டா தயாரித்தால், அதுவும் மோசடி பத்திரம் என்றே கருதப்படுகிறது. இவ்வாறு உள்ள பத்திரங்கள் பதிவு செய்யும்போது, பதிவாளர், பழைய பத்திரங்களை ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறை. ஆனால், சமீப காலமாக  பதிவுத்துறை  வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால், போலி பத்திரப்பதிவுகளம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற போலி   பத்திர பதிவுகளை , புதிய சட்டத்திருத்த அடிப்படையில் ரத்து செய்ய முடியாது என்று மாவட்ட பதிவாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்படுகிறது. ஒரு கிரைய பத்திரம் பதிவுக்கு வரும் போது, அதற்கான சொத்தை விற்பவருக்கு, அந்த சொத்து எப்படி வந்தது என்பதற்கான பழைய பத்திரத்தை ஆய்வு செய்தால் போதும் என்று, பெரும்பாலான சார் – பதிவாளர்கள் நினைக்கின்றனர்.

இதன் காரணமாக, இதை தடுக்கும் வகையில்,  போலி பத்திரப்பதிவுக்கு உறுதுணையாக செல்லும் அதிகாரிகள், பத்திரப்பதிவுகளை  வேண்டுமென்றே தாமதிக்கும் நபர்கள் மீதும், மோசடி பத்திர ரத்து சட்டத்துக்கு எதிராக செயல்படும் மாவட்ட பதிவாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுதது,  பத்திரப்பதிவின்போது, பழைய பத்திரங்கள், தாய்ப்பத்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,  பதிவான நான்கு அல்லது ஐந்து பத்திரங்களின் அசல் பத்திரங்களை சரி பார்க்க வேண்டும் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆய்வு செய்ததில்,  எந்தெந்த பழைய ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன என்ற விபரங்களை, புதிய கிரைய பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன்,  இதுதொடர்பாக சார் – பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பதிவுத்துறை தெளிவாக வரையறுத்து உள்ளது.

பழைய பத்திரம் காணாமல் போயிருந்தால், வங்கி அடமானத்தில் இருந்தால், அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது.

சில சார்பதிவாளர்கள் பழைய பத்திரங்களை சரி பார்ப்பதில் தவறான அணுகுமுறையை பின்பற்றுவதாகவும், பழைய பத்திரங்களை சரி பார்க்காமல் கிரைய ஆவணங்களை பதிவுக்கு ஏற்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய பதிவுத்துறை அதிகாரி, ஒரு குறிப்பிட்ட வழக்கில் கீழ் நீதிமன்றத்தில், பழைய பத்திரங்களை சரி பார்க்க வேண்டாம் என சில மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், சில வழக்கறிஞர்கள் கீழ் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி பழைய பத்திர சரி பார்ப்புக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். இதற்கு சில சார் – பதிவாளர்கள் துணையாக செயல்படுவது தெரியவந்துள்ளது. விதிவிலக்கான பத்திரங்கள் தவிர்த்து மற்ற அனைத்துக்கும் பழைய பத்திரங்களை சரி பார்ப்பது கட்டாயம். தவறான வழிகாட்டுதல் அடிப்படையில் பழைய பத்திரங்கள் சரி பார்ப்பில் அலட்சியம் காட்டும் சார் – பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.