சென்னை: 
மாநகராட்சி தரமற்ற சாலைகளால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெரு சென்னை மாநகராட்சியின் தரமற்ற சாலைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் வடிகால் அமைப்புகளால் வெள்ளம் மற்றும் குடியிருப்பாளர் களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியதற்காகத் தமிழ்நாடு தகவல் ஆணையம்  கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள பெருமாள் புரத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, சென்னை அகில இந்திய மாணவர் நல அமைப்பின் நகர கன்வீனர் வி.முருகேஷ் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் இவ்வாறு எழுதினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், மோசமான சாலைப் பணி காரணமாக தனது பகுதி மழையில் வெள்ளத்தில் மூழ்கியதாகக் கூறி, அது பற்றிய விவரங்களை மனுதாரர் கோரினார். அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அப்பகுதியில் வசிப்பதால், கேட்கப்பட்ட தகவல்களைப் அளிக்க அதிகாரிகள் தயங்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் சாலைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் வடிகால் அமைப்புகளை ஆய்வு செய்யுமாறு முத்துராஜ் தனது உத்தரவில் கேட்டுக் கொண்டார். சிவில் வேலைகளில் நிபுணத்துவம் பெற்ற இராணுவப் பொறியியல் சேவைகளிலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை இந்த வசதிகளை ஆய்வு செய்வதற்கும், விதிமுறைகளின்படி பழுதுபார்ப்புகளை மேற்பார்வை செய்வதற்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
சாலைகள் அமைக்கும் போது செய்யப்படும் தரமற்ற பணிகளுக்கு சிவில் ஒப்பந்ததாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்த மாநில தகவல் ஆணையர், பொறுப்பற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திரு. முத்துராஜ் கூறுகையில், ஏற்கனவே உள்ள மற்றும் சேதமடைந்த சாலைகளில் புதிய சாலைகள் போடப்படுகின்றன; இதனால் சாலைகள் தரைமட்டத்திற்கு மேல் உயர்ந்தன. அலுவலகம், வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் இருபுறமும் சாலை மட்டத்திற்குக் கீழே இருந்ததால், வெள்ளம் மற்றும் மழைநீர் தேங்கியது.
“இராணுவப் பொறியியல் சேவைகளிலிருந்து ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள், 200 வார்டுகளில் பழுதுபார்ப்பு/திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் நியமிக்கப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்கள் பழைய சாலைகளைத் தூர்வாராமல், ஏற்கனவே உள்ள ரோடுகளில் புதிய சாலைகளைப் போட்டு பணத்தை மிச்சப்படுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் சாலை தற்போது தரைமட்டத்திற்கு மேல் உள்ளது. இந்திய சாலைகள் காங்கிரஸின் வழிகாட்டுதலின்படி, விதிமீறலுக்குக் காரணமான ஒப்பந்ததாரரின் விலையில் இதுபோன்ற சாலைகளைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும், ”என்று முத்துராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பரிந்துரை செய்தார்.
அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் சாலை மட்டத்திற்கு கீழே கட்டப்படவில்லை. ஆனால் தற்போதுள்ள சாலைகளில் மீண்டும் மீண்டும் புதிய சாலைகள் போடுவதால், சாலை மட்டம் உயர்த்தப்பட்டது, பொதுத் தகவல் அலுவலரிடம் தகவல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதற்காக மனுதாரருக்கு ரூ.27,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார் திரு.முத்துராஜ். முழுமையான தகவல்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்குப் பொறுப்பான அதிகாரியிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டுமா என்பதை பெரு சென்னை மாநகராட்சி முடிவு செய்யலாம், என்றார்.