சென்னை: தொழிற்துறையினருக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல  மாவட்டங்களில் இன்று கதவடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  தொழில்துறை அமைச்சருடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்து வரி முதல், மின்கட்டணம், பால்விலை என அனைத்து வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களின் தலையில் மேலும் கடன்சுமையை அதிகரித்து உள்ள நிலையில், இலவசங்களை அறிவித்து, மக்களை மனதை மாற்றி வருகிறது.

இதற்கிடையில் வணிக நிறுவனங்களுக்கு மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுகுறு வணிகர்கள், தொழிற் துறையினர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சிறுகுறு நிறுவனங்கள் அதிகம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில் துறையினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். முதல்கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான காரணம்பேட்டையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கதவடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.  இந்த போராட்டம் தற்போது  உச்சக்கட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் மின் கட்டணம் தொடர்பாக வெளியிட்ட செய்தியில் தொழில் அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி இன்று முதல் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி, தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் தொழில் நிறுவனங்களும், கோவையில் 30 ஆயிரம் நிறுவனங்கள் உட்பட திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 63 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்று உள்ளன.

இந்த போராட்டத்தில் ஈரோட்டில் 20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 3 லட்சம் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. திருப்பூரில் பனியன், நிட்டிங், பிரிண்டிங் என 10,000 நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மதுரையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொழில் துறையினர் கதவடைப்பு போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் ரூ.1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு மற்றும் 3 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.  தங்களின் கோரிக்கை தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மின்வாரிய தலைமை பொறியாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழில்துறை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து   ஆலோசனை நடத்தி வருகிறார்.