டெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 884 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், சமூக இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம்,தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேவேளையில் கொரோனாவில் இருந்து குணமாகி விடுதலைபெறுவோர் எண்ணிக்கையும் 50 சதவிகிதத்தற்கு மேல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக வைரஸ் பரவுவதில் அதிவேகம் இல்லை என மத்திய அரசு கூறி உள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 342 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 3301 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 151 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் 2918 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் மேலும் ஐந்து பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. அதில் 35 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொற்றுநோயால் புவனேஸ்வரைச் சேர்ந்த 72 வயது நபர் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.