ந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 27000 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 324 கொரோனா கேஸ்களை குணப்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கேரள மாநிலம்.

இந்நிலையில் இந்நோயின் பிடியிலிருந்து மீண்டவர்களிடம் நோய் அறிகுறிகள், சிகிச்சை பெற்ற போது சந்தித்த சவால்கள், இவர்களின் தற்போதைய மனநிலை குறித்து கேட்டு அறிந்து, அவற்றை இப்போது சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு தெரியப்படுத்துதல் நோயாளிகளின் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தும் என்பது உறுதி.

அவ்வாறு சிகிச்சை பெற்று வெற்றிகரமாக கொரோனாவை வீழ்த்தி மீண்டு வந்தவர்களிடம் கேட்டறிந்து சேகரித்த விபரங்கள் சில:

பொதுவான அறிகுறிகள் – மூக்கில் ஏற்படும் அலர்ஜி, உடல் வலி, சோர்வு, இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல்

மன ரீதியிலான சவால்கள் – தனித்து விடப்பட்டது, நீண்ட நாட்ளாக குடும்பத்தை பிரிந்திருந்தது, குணமான பின்னால் கொரோனா நோயாளி என முத்திரை குத்தப்பட்டு விடுவோமே என்கிற வருத்தம், இறந்து விடுவோமோ என்கிற அச்சம், குடும்பத்தினருக்கும் பரவி விடுமே என்கிற மன உளைச்சல், பதட்டம், நோய் தாக்குதலால் உண்டான குற்ற உணர்வு

மீண்டு வந்ததற்கான முக்கிய காரணங்கள் – குடும்பத்தினரின் ஆதரவு, கடவுள் நம்பிக்கை, நோயை வெல்ல வேண்டும் என்கிற தீவிரம், சரியான நேரத்திற்கு எடுத்துக்கொண்ட மருந்துகள், கருத்தாக பின்பற்றப்பட்ட உணவு பழக்கங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் உன்னத சேவை

தற்போதைய மன நிலை பற்றி இவர்கள் கூறியவைகள் –

* என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால் நான் முன்பை விட இப்போது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

* சாவு பயத்திலிருந்து மீண்டு வந்துள்ளது, வாழ்க்கையை எதிர்கொள்ளும் சக்தியை இன்னும் அதிகரித்துள்ளது

* என்னை ஒரு கருணை மிகுந்த மனிதனாக மாற்றிவிட்டது இந்த கொரோனா.

* இப்போது நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசி அவர்களை உத்வேகம் கொள்ள வைக்கிறேன். இதை இரவு பகலாக செய்து வருகிறேன்.

*சமூக பணிகளில் இனி தொடர்ந்து ஈடுபடும் மன திடத்தை அளித்துள்ளது

* குடும்பத்தினரை முன்பை விட அதிகம் நேசிக்க தொடங்கியுள்ளேன்.

இது பற்றி மனநல மருத்துவர் சிஜே. ஜான் கூறும் போது, “வரும் காலங்களில் இவர்களை ‘கொரோனா நோயாளி’ என முத்திரை குத்தி ஒதுக்க முற்படுவது ஒரு மிகப்பெரிய சோகம். இதனை பெரிய களங்கமாக கருதாமல் இதிலிருந்து விடுபட முயல்வது மிகவும் அவசியம்.

அதேபோல குணமடைந்தவர்களை ஒதுக்கி வைப்பது அறிவியல் ரீதியாக தவறு என்பதுடன் இது ஒரு மனித நேயமற்ற செயலும் கூட. கொரோனா பரிசோதனை செய்து கொள்ளாத ஒருவருடன் நெருங்கி பழகுவதை விட பாதுகாப்பானது இதிலிருந்து குணமானவருடன் பழகுவது. அதே போல இதிலிருந்து குணமானவர் இந்த சமூகத்தின் தவறான பார்வைகளை பொருட்படுத்தவே கூடாது. தாமாக சுய பட்சாதாபம் கொண்டு ஒதுங்கி வாழாமல், அவர்களுடன் பழக நினைப்பவர்களை தேடி சென்று சகஜமாக முயல்வதே நல்லது” என்று உத்வேகம் அளிக்கிறார்.

லெட்சுமி பிரியா