இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்வதாகவும் அதோடு ஏப்ரல் 23 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பின் இந்தியாவில் இருந்து எந்த ஒரு விமானத்தையும் அனுமதிப்பதில்லை என்றும் இங்கிலாந்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்திய விமானங்களுக்கு தடை குறித்த அறிவிப்பு ஏப்ரல் 19 ம் தேதி கையெழுத்தானதை தொடர்ந்து, 19 முதல் 23 வரை இங்கிலாந்து சென்ற பயணிகள் விமானம் அனைத்தும் நிரம்பி வழிந்தன, இதனை காரணமாக வைத்து கூடுதலாக எட்டு பயணிகள் விமான சேவைக்கு அனுமதி கோரப்பட்டது இதற்கு லண்டன் விமான போக்குவரத்து நிர்வாகம் அனுமதி மறுத்தது.

அதை தொடர்ந்து, சிறிய ரக தனி விமான சேவைக்கு அனுமதி கோரி இருந்தனர். அதற்கு இசைவு தெரிவித்த இங்கிலாந்து அரசாங்கம், எத்தனை விமானங்கள், யார் யார் பயணிக்கிறார்கள், எங்கு தங்க போகிறார்கள் என்ற தகவலை பெற்றுக்கொண்டு, அந்த தனியார் விமானங்கள் அனைத்தும் லண்டனின் மற்றொரு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

அனுமதி கிடைத்ததை அடுத்து, தங்கள் சொந்த விமானங்கள் தவிர இரவல் மற்றும் வாடகை விமானங்கள் என்று மொத்தம் எட்டு விமானங்களில் ஏறி கொரோனா பிடியில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று இங்கிலாந்து சென்றுள்ளனர் இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்கள்.

இதில் நான்கு விமானங்கள் மும்பையில் இருந்தும், மூன்று விமானங்கள் டெல்லியில் இருந்தும் ஒரு விமானம் அகமதாபாத் நகரில் இருந்தும் சென்றதாக இங்கிலாந்து விமான போக்குவரத்து துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

6 பேர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய விமானத்திற்கு ஒரு மணி நேர வாடகை மட்டும் சுமார் 4 லட்சம், இது தவிர எரிபொருள் மற்றும் இதர செலவுகள் உள்ளன.

9 நபர் வரை பயணிக்கும் விமானத்திற்கு 8 லட்சம், 19 பேர் வரை பயணம் செய்யும் விமானத்திற்கு 16 லட்சம் என்று கட்டணம் செலுத்தி விருந்தினர் வீட்டில் இருந்தபடி வேலை செய்து இங்குள்ள தங்கள் தொழில் வளத்தை பெருக்க சென்றுள்ளனர்.

பம்பார்டர் ரக ஜெட் விமானம்

இதில் இங்கிலாந்தில் இந்திய விமானம் நுழைய தடைவிதிக்கப்பட்ட நேரத்திற்கு 45 நிமிடத்திற்கு முன் லன்டனில் தரையிறங்கிய பம்பார்டர் ரக ஜெட் விமானம் அதிகபட்சமாக 13 நேரம் தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்டது என்றும் அதில் மொத்தம் 13 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் தெரிகிறது.

புறப்படும் இடம் மற்றும் இங்கிலாந்தில் தரையிறங்கும் இடம் பொறுத்து சராசரியாக 8 ல் இருந்து 9 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும் நிலையில், தனி விமானங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் குறிப்பாக மும்பையில் இருந்து விமானங்களுக்கான தேவை திடீரென அதிகரித்ததால் திக்குமுக்காடிப் போன விமான சேவை நிறுவனங்கள் மும்பையில் இருந்து துபாய் செல்வதற்கான ஒருவழி கட்டணத்தை 8000 ரூபாயிலிருந்து 80000 ரூபாயாக உயர்த்தியது.

ஏப்ரல் 25 ஞாயிறு முதல் ஐக்கிய அரபு அமீரகமும் இந்திய விமானங்கள் வர தடைவிதித்ததால் துபாய் உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்யும் இந்தியர்கள் கட்டண கொள்ளையால் அள்ளாடினார்கள்.